வேற்றுகிரகவாசிகளுக்காக 9 ஆயிரம் மக்களை வெளியேற்றிய சீன அரசு
வேற்றுக்கிரகவாசிகள், பறக்கும் தட்டுகள் குறித்து அவ்வப்போது பரபரப்பான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இவைகள் உண்மைதானா? என்பது குறித்து ஆய்வு செய்ய திட்டமிட்ட சீனா, உலகின் மிகப்பெரிய ரேடியோ டெலஸ்கோப்பை தயாரிக்கவுள்ளது.
தென்மேற்கு சீனாவில் அமைக்கப்படவுள்ள இந்த டெலஸ்கோப் 500 மீட்டர் பரப்பளவுடன் 30 டன் எடைகொண்டது. மேலும் 34 அடிநீளம் கொண்ட தகடுகளால் இது அமைக்கப்படுகிறது. பிரபஞ்சத்தில் எந்த ஒரு நடமாட்டத்தையும் கண்டறியும் சக்தி கொண்ட இந்த டெலஸ்கோப்பில் பதிவாகும் காட்சிகளை வைத்து வேற்றுகிரகவாசிகள் உண்மையிலேயே இருக்கின்றார்களா என்பதை அறிய முடியும்.
20 ஆண்டுகளுக்கு முன்பே இந்த டெலஸ்கோப்பை அமைக்க சீனா திட்டமிட்டிருந்தாலும் தற்போதுதான் இதற்கு செயல்வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு செப்டம்பரில் இந்த டெலஸ்கோப் செயல்பட தொடங்கும் என்றும் இதற்காக சீனா, இந்திய மதிப்பில் சுமார் 1,264 கோடி செலவு செய்துள்ளதாகவும் சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால் அதே நேரத்தில் இந்த டெலஸ்கோப்பை நிறுவுவதற்காக அந்த பகுதியில் பல ஆண்டு காலமாக வசித்து வந்த சுமார் 9 ஆயிரம் பேர் அப்புறப்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு இழப்பீடாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.1 லட்சம் வழங்கப்படவுள்ளதாக அரசு அறிவித்திருந்தாலும் அந்த பகுதி பொதுமக்கள் இதுகுறித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
Chennai Today News: Nine Thousands Chinese Residents Evacuated For World’s Largest Telescope