நிர்பயா கொலை வழக்கில் தண்டனை முடிந்தும் சிறார் குற்றவாளி விடுதலையாவதில் சிக்கல்
டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவக்கல்லூரி மாணவி நிர்பயாயை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சிறைத்தண்டனை முடிந்த சிறார் குற்றவாளியை விடுதலை செய்வதை நிறுத்தி வைக்குமாறு டெல்லி ஐகோர்ட்டில் மத்திய அரசு நேற்று கோரிக்கை விடுத்தது.
இந்த வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சிறார் குற்றவாளியின் சிறைத்தண்டனை முடிவடைந்ததால் வரும் ஞாயிற்றுக்கிழமை அவரை விடுதலை செய்ய சிறை அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அவருடைய விடுதலைக்குப் பிந்தைய மறுவாழ்வுத் திட்டத்தில் சில முக்கிய அம்சங்கள் விடுபட்டிருப்பதால், அவரை சீர்திருத்த இல்லத்திலேயே தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதிகள் ஜி.ரோஹிணி, ஜெயந்த் நாத் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் மத்திய அரசு வழக்கறிஞர் சஞ்சய் ஜெயின் வாதம் செய்தபோது, “சிறாரின் விடுதலைக்குப் பிந்தைய மறுவாழ்வு தொடர்பாக, சிறார் நீதிச் சட்டத்தின்படி, சில திட்டங்களை நிர்வாகக் குழு தயாரித்துள்ளது. நிர்பயா வழக்கில் சிறைத்தண்டனை முடிந்த அந்த சிறார் குற்றவாளியை விடுதலை செய்வதற்கு முன், நிர்வாகக் குழு பரிந்து செய்யும் மறுவாழ்வுத் திட்டங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில், சிறாரின் மனநிலை குறித்து மனநல ஆலோசகர் அளிக்கும் அறிக்கை, விடுதலைக்குப் பிறகு சமூகத்துடன் இணைந்து வாழ அவருக்கு விருப்பம் உள்ளதா? ஆகியவை பற்றிய விவரங்கள் விடுபட்டுள்ன. விடுதலைக்குப் பிந்தைய கவனிப்புகளும் அந்த அறிக்கையில் விடுபட்டுள்ளன. எனவே, விடுதலைக்குப் பிந்தைய மறுவாழ்வுத் திட்ட அறிக்கை தயாராகும் வரை சிறார் விடுதலையை நிறுத்திவைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த வாதத்திற்கு பின்னர் நீதிபதிகள் கூறியபோது, ‘மறுவாழ்வுத் திட்ட அறிக்கை, புலனாய்வுத் துறையின் அறிக்கை ஆகியவற்றை ஆய்வு செய்த பிறகே இதுதொடர்பாக, உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தனர்.
ஏற்கனவே சிறார் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடிவடைந்து விரைவில் தீர்ப்பு அளிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட முகேஷ், வினய், பவன், அக்ஷய் ஆகிய நால்வருக்கும் ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டதும் மற்றொரு குற்றவாளியான ராம் சிங் சிறையில் தற்கொலை செய்து கொண்டதும் அனைவரும் அறிந்ததே.
English Summary: Nirbhaya juvenile to walk free on Dec 20, Centre opposes move