நிர்பயா குற்றவாளி தற்கொலை முயற்சி. திகார் சிறையில் பரபரப்பு
டெல்லி மருத்துவக்கல்லூரி மாணவி நிர்பயா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான வினய் என்பவர் சிறையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் அவரை காப்பாற்றிய போலீஸார் மருத்துவமனையில் சேர்த்துள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
நிர்பயா கொலை வழக்கில் மொத்தம் பேருந்து ஓட்டுனர் ராம் சிங், அவரது சகோதரர் முகேஷ், அக்ஷய் தாகூர், பவன், வினய் மற்றும் முகமது அஃப்ரோஸ் என்ற சிறுவன் ஆகியோர் இந்த வழக்கில் குற்றவாளிகள் என நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் முகமது அஃப்ரோஸ் சிறுவன் என்பதால் சீர்த்திருத்தப்பள்ளி சிறைவாசத்திற்கு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
மேலும், குற்றவாளிகளில் ராம்சிங் என்பவர் திகார் சிறையில் கடந்த 2013ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள வினய் சர்மாவும் இன்று திகார் சிறையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் இதுகுறித்து தகவல் அறிந்த திகார் சிறை அதிகாரிகள் உடனடியாக தற்கொலைக்கு முயன்ற வினய் சர்மாவை, மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்து உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.