சிபிசிஜடி விசாரணை வேண்டும்: காமராஜர் பல்கலைக்கழக கூட்டு குழு கோரிக்கை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகள் நான்கு பேரிடம் பேராசிரியை ஒருவர் பேசிய தொலைப்பேசி உரையாடல் சமூக வேலைதளங்களில் வேகமாக பரவியது. மாணவிகளை தவறாக வழிநடத்திய விதத்தில் பேசிய பேராசிரியையின் உரையாடல் சர்ச்சையை ஏற்படுத்த, அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தற்போது பேராசிரியை நிர்மலாதேவியை கைசெய்து விசாரணை செய்து வருகின்றனர்.
அவர் கைதுசெய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே, பேராசிரியை மீது உயர்மட்ட விசாரணை நடத்தக்கோரி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு குறித்த விசாரணையை ஓய்வுப்பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர். சந்தானம் நடத்துவார் என்றும் ஆளுநர் அறிவித்தார்.
தற்போது பேராசிரியை விவகாரம் தொடர்பான விசாரணையை மேற்கொள்ள 5 பேர் கொண்ட பல்கலைக்கழக குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விசாரணைக்குழுவிற்கு மதுரை காமராஜ பல்கலைக்கழக கூட்டு நடவடிக்கை குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்கள் இந்த விவகாரத்தை விசாரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இந்த சம்பவத்தில் பேராசிரியை நிர்மலாதேவியை இயக்கியது யார் என்பது தெரியவரவேண்டும் என மதுரை காமராஜர் பல்கலைக்கழக கூட்டு நடவடிக்கை குழு கூறியுள்ளது.
மேலும் அந்த குழுவை சேர்ந்தவர்கள், இந்த விவகாரத்தில் சிபிசிஜடி விசாரணை வேண்டும் எனவும் அப்போது தான் இந்த விவகாரத்தில் சம்மந்தப்படவர்களின் விவரங்கள் முழுவதுமாக தெரியவரும் என்றும், பேராசிரியை விவகாரத்தை மூடி மறைத்து விடலாம் என்று நினைத்தால் அது நடக்காது என்றும் தெரிவித்துள்ளனர்.