சிபிஎஸ்இ பள்ளிகளில் சமஸ்கிருதம் கட்டாயம். மத்திய அமைச்சரின் அறிவிப்புக்கு கண்டனம்.

சிபிஎஸ்இ பள்ளிகளில் சமஸ்கிருதம் கட்டாயம். மத்திய அமைச்சரின் அறிவிப்புக்கு கண்டனம்.

நாடு முழுவதிலும் உள்ள அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும் சமஸ்கிருதம் கட்டாயம் என்ற நிலை கொண்டு வர வேண்டும் என்றும் அதற்காக மனிதவளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் பேச்சுவார்த்தை நடத்துவேன் என்றும் மத்திய தொழில்துறை மற்றும் வர்த்தக்கத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். அமைச்சரின் இந்த பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

சென்னையில் உள்ள சமஸ்கிருத கல்லூரியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘ஆன்லைன் வாயிலான டிஜிட்டல் வழி படிப்புகளை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

சமஸ்கிருதம் டிஜிட்டல் முறையில் கற்பிப்பதற்கான சிறந்த மொழி. உலகின் பல்வேறு நாடுகளில் பேசப்படும் மொழிகளில் சமஸ்கிருத வார்த்தைகளை அதிகளவில் பார்க்க முடிகிறது. இதன் காரணமாக சம்ஸ்கிருதத்தின் பாரம்பரியத்தை காக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ பள்ளிகளில் சமஸ்கிருதம் உள்ளிட்ட மும்மொழி பயிற்றுவிப்பு திட்டத்தை அமல்படுத்த மனிதவளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் கோருவேன். அதுமட்டுமல்லாமல், மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப அதனை செயல்படுத்த வேண்டும். அதிகளவில், மொழிகளை கற்பதால் மாணவர்களின் திறன் உயரும் என்று அவர் கூறியுள்ளார்.

ஒரு மொழியை மாணவர்களே விரும்பி படிப்பது என்பது வேறு, அதே சமயத்தில் திணிப்பது என்பது வேறு என்றும், சமஸ்கிருத மொழியை மத்திய அரசு வலுக்கட்டாயமாக திணித்தால் அதனை எதிர்த்து போராடுவோம் என்றும் டுவிட்டர், ஃபேஸ்புக்கில் பலர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Reply