சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி இல்லை என வர்த்த மற்றும் தொழில் துறை அமைச்சர் (தனிப் பொறுப்பு) நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மத்திய தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சராக நேற்று பொறுப்பேற்றுக்கொண்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி இல்லை என்று உறுதியாக கூறியுள்ளார். இந்தியாவின் சிறு விவசாயிகள் மற்றும் சில்லரை வர்த்தகர்களை பாதிக்கும் அன்னிய நாட்டின் அங்காடிகள் மற்றும் ஷாப்பிங் மால்கள் இந்தியாவில் அனுமதிக்கப்படாது என்று கூறினார்.
நேற்று வர்த்தகத்துறை அமைச்சராக பதவியேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், அன்னிய முதலீடு விவகாரத்தில் பாஜக தேர்தல் அறிக்கைப்படியே செயல்படுவோம் என்றும் கூறினார்.
தேர்தல் அறிக்கை என்ன கருத்து தெரிவித்தோமோ அதே நிலை தொடர்ந்து பின்பற்றப்படும் என்றும், பாரதிய ஜனதா அரசு சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டு விவகாரம் தொடர்பான தன்னுடைய நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
தற்போது நடைமுறையில் உள்ள அன்னிய முதலீடு கொள்கைகளை மறுசீரமைப்பு செய்ய அரசு முடிவெடுத்துள்ளது என்றும், மறுசீரமைப்பு பணிகள் கூடிய விரைவில் தொடங்கப்படும் என்றும் கூறினார்.
அனைத்து நாடுகளுடன் பொருளாதார உறவை மேம்படுத்தி ஏற்றுமதியை அதிகரிப்பதே இந்த அரசின் முதல் குறிக்கோள் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.