அதிகாரத்தை அபகரிக்க்க நினைக்கிறது இந்திய நீதித்துறை. சோம்நாத் சாட்டர்ஜி ஆவேசம்

அதிகாரத்தை அபகரிக்க்க நினைக்கிறது இந்திய நீதித்துறை. சோம்நாத் சாட்டர்ஜி ஆவேசம்

somnathசமீபத்தில் நீதிபதிகளை நியமனம் செய்ய மத்திய அரசு அமைத்த நீதிபதிகள் நியமன தேசிய ஆணையத்தை (என்ஜேஏசி) அமைப்பதற்கான சட்டத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த அதிரடி நடவடிக்கை சர்ச்சைக்குரியதாக விவாதம் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த தீர்ப்பை மக்களவையின் முன்னாள் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சோம்நாத் சாட்டர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார். அதிகாரத்தை அபகரிக்கும் நோக்கத்துடன் நீதித்துறை செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் நேற்று பேசிய சோம்நாத் சாட்டர்ஜி, ” நீதிபதிகள் நியமன தேசிய ஆணையச் சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பளித்த அமர்வில் இடம் பெற்ற ஒரு நீதிபதி, மற்ற நீதிபதிகளின் கருத்துகளோடு மாறுபட்டிருக்கிறார். மத்திய அரசு தனது நிலையில் இருந்து பின்வாங்கக் கூடாது. அதேவேளையில், நீதித்துறையுடன் மோதல் போக்கையும் கடைபிடித்துவிடக் கூடாது. நீதிபதிகளை நீதிபதிகளே தேர்வு செய்யலாம் என்ற அதிகாரத்தை அவர்களாகவே எடுத்துக் கொண்டுள்ளனர். நமது அரசியல் சாசனத்திலோ அல்லது சட்டத்திலோ இதற்கு இடம் கிடையாது.

நியமன அதிகாரத்தை தாங்களே எடுத்துக் கொள்வதில் நீதித்துறையினர் தீவிரமாக செயல்படுகின்றனர்.நீதிபதிகளால் நியமிக்கப்படும் நீதிபதிகள் சிறந்தவர்களாக இருப்பார்கள் என்பதை யார் நிரூபனம் செய்வது? என்ற கேள்வி எழுகிறது. இந்தச் சூழலில், கொலிஜீயம் முறையால் நீதித்துறைக்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறதா? இல்லையா? என்பது ஆய்வு செய்யப்பட வேண்டும். இந்த நாட்டின் சாமானிய மக்களுக்காக உச்ச நீதிமன்றம் என்ன செய்திருக்கிறது? அனைத்து அதிகாரங்களையும், சுதந்தரத்தையும் நீதிமன்றங்களே அபகரித்துக் கொண்டுள்ளன. ஒட்டுமொத்த நாடாளுமன்றமும் ஒப்புதல் அளித்த ஒரு சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது ஏன்? நீதிபதிகளுக்கு அனைத்து விஷயங்களும் தெரியும் எனக் கருதும் நிலையில், கொலீஜியம் முறையை மேம்படுத்த ஆலோசனைகள் கேட்பதாக அவர்கள் தெரிவிப்பது ஏன்? என்று சோம்நாத் சாட்டர்ஜி கேள்வி எழுப்பினார்.

நீண்ட காலம் உச்ச நீதிமன்ற வழக்குரைஞராகப் பணியாற்றிய சோம்நாத் சாட்டர்ஜி, தற்போது நீதித்துறைக்கு எதிராகவே விமர்சனங்களை முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary: NJAC: Former Lok Sabha Speaker Somnath Chatterjee wants government to set things right without feuding

Leave a Reply