தொழிலாளர்களின் எதிர்ப்பை மீறி நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தின் பெயர் மாற்றம்
தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்றான “நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பெயரை “என்.எல்.சி. இந்தியா லிமிடெட்” என்று பெயர் மாற்ற கடந்த சில மாதங்களாக மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இதற்காக மத்திய அரசு தொழிலாளர்களிடம் கருத்து கேட்டபோது தொழிலாளர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நெய்வேலி என்ற பெயரை மறைப்பதற்காக மத்திய அரசு செய்யும் சதிச்செயல் என்று தொழிலாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் தொழிலாளர்களின் எதிர்ப்பை மீறி இன்று முதல் இந்த நிறுவனம் “என்.எல்.சி. இந்தியா லிமிடெட்” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை என்.எல்.சி நிர்வாகம் உறுதி செய்துள்ளது. பங்குதாரர்கள் மற்றும் மத்திய அரசின் ஒப்புதலுடனே இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக என்.எல்.சி. நிர்வாகம் தெரிவித்துள்ள போதிலும், வெளிமாநில தொழிலாளர்களை குறைந்த சம்பளத்தில் பணியமர்த்தவே பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் மத்தியில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
இந்த பெயர் மாற்றத்திற்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்துவது குறித்து தொழிலாளர்கள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.