ஆதார் அட்டையுடன் செல்போன் எண்ணையும் இணைக்க அறிவிப்பு
ஆதார் அட்டையுடன் கிட்டத்தட்ட அனைத்து ஆவணங்களையும் இணைக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்களிடம் வலியுறுத்தி வரும் நிலையில் தற்போது செல்போன் எண்களையும் ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ரேசன் அட்டை, பான்கார்டு, வங்கிக்கணக்கு, பாஸ்போர்ட் உள்பட பல ஆவணங்களுடன் ஆதார் அட்டை இணைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது செல்போனுக்கு அந்த நிலை ஏற்பட்டுள்ளது. முதல்கட்டமாக பி.எஸ்.என்.எல் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
முறைகேடுகளை தவிர்ப்பதற்காக, பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் கீழ் பிரீபெய்டு மற்றும் போஸ்டு பெய்டு திட்டங்களின் கீழ் செயல்படும் அனைத்து செல்போன் பயன்படுத்துபவர்கள் தங்கள் செல்போன் எண்ணுடன், தங்கள் ஆதார் அட்டை எண்ணையும் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி செல்போன் எண்ணுடன் ஆதார் அட்டை இணைப்புக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இந்தப்பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்தப்பணியை முழுவதுமாக வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டு உள்ளோம்.
கூட்ட நெரிசலை சமாளிக்க வாடிக்கையாளர் சேவை மையங்கள், அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் மற்றும் முகவர்களிடம் ஆதார் அட்டை எண்ணை இணைத்து கொள்ளலாம். தவறும் பட்சத்தில் மத்திய அரசின் உத்தரவை ஏற்று நடவடிக்கைகள் எடுப்பது குறித்து பின்னர் தெரியவரும்.