சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையான ஜெயலலிதா நேற்று முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு பிரதமர் மோடி, நிதியமைச்சர் அருண்ஜெட்லி உள்பட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் திமுக, அதிமுகவுடன் அரசியல் கூட்டணி இல்லை என்று நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அருண் ஜேட்லி, “திமுக அல்லது அதிமுக-வுடன் கூட்டணி இல்லை. நாடாளுமன்றத்தில் பல விவகாரங்களில் கட்சிகளுடன் நாங்கள் உடன்படுகிறோம். அவர்களும் எங்களுக்கு ஒத்துழைப்பு தருகிறார்கள். ஆனால் வேறுபாடுகள் ஏற்படும் விவகாரங்களும் உள்ளன.
தமிழக தேர்தல்களைப் பொறுத்தவரை எங்களுக்கென்று தனி உத்தி உள்ளது. அரசு ரீதியாகப் பார்த்தால் எங்களிடையே சிறந்த உறவுகள் உள்ளது, அது பராமரிக்கப்படும்.எனவே தமிழக அரசுக்கு நாங்கள் அனைத்து விதத்திலும் ஒத்துழைப்பு வழங்குவோம். ஏனெனில் மக்கள் நலன் தொடர்பாக எங்களுக்கிடையே எந்த வித கருத்து வேறுபாடுகளும் இல்லை” என்றார்.
ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஜேட்லி, “இந்த பதவிக்காலத்தில் அவர் வெற்றி பெற வாழ்த்துகிறோம்” என்று கூறியுள்ளார்.