ராம்குமாருக்கு ஜாமின் இல்லை. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் திட்டவட்டம்
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாருக்கு, ஜாமின் கொடுக்க முடியாது என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ராம்குமாருக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் சடை கிருஷ்ணமூர்த்தி கடந்த 5 ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். ஆனால் திடீரென அந்த ஜாமின் மனுவை மறுநாளே திரும்பப்பெற விரும்புவதாகவும் நீதிமன்றத்திடம் தெரிவித்தார். ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம், ஜாமின் மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையில் அரசு தரப்பு வழக்கறிஞர், ராம்குமாருக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். ராம்குமார் தற்போது விசாரணைக் காவலில் உள்ளதாகவும், அவரிடம் விசாரணை தொடர்ந்து நடத்தப்பட வேண்டிய அவசியம் இருப்பதால் அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்தார். அதே நேரத்தில் ஜாமின் கோரிய வழக்கறிஞர் சடை கிருஷ்ணமூர்த்தி இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அரசு தரப்பு வாதங்களை மட்டும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், ராம்குமாருக்கு ஜாமின் வழங்க முடியாது என்று தெரிவித்தார்.
இதனிடையே, சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரிடம், போலீசார் 3வது நாளாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.