ரொக்கமாக சம்பளம் வழங்கக்கூடாது. தொழிலக பாதுகாப்பு, சுகாதாரத்துறை உத்தரவு

ரொக்கமாக சம்பளம் வழங்கக்கூடாது. தொழிலக பாதுகாப்பு, சுகாதாரத்துறை உத்தரவு

VID: Facial Recognition ATMs to Curb ATM -related Crimesஜெயலலிதா மறைவு பரபரப்பில் ரூபாய் நோட்டு பிரச்சனையை மக்கள் இரண்டு நாட்கள் மறந்தே விட்டார்கள். இந்நிலையில் இந்த பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தொழிலக பாதுகாப்பு, சுகாதாரத்துறை இயக்குநர் பி.போஸ் இன்று ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவின்படி இனிமேல் அனைத்து தொழிலாளர்களுக்கும் வங்கிகள் மூலம் மட்டுமே சம்பளம் வழங்க வேண்டும் என்பதுதான்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தொழிற்சாலைகள், கட்டிடம், இதர கட்டுமான நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு காசோலை மூலமாகவோ, மின்னணு பரிவர்த்தனை மூலமாகவோ வங்கிகளில் ஊதியம் வழங்கப்படுவதன் காரணமாக வெளிப்படைத்தன்மை உருவாக்கப்படுகிறது. இதுமட்டுமில்லாமல், குறைந்தபட்ச ஊதியம் வழங்காமை மற்றும் உரிய தேதிக்குள் ஊதியம் வழங்காதது போன்ற தொழிலாளர்களின் குறைகளையும் தடுக்க இயலும் என்று மத்திய அரசு கருதுகிறது.

மத்திய அரசின் பணமில்லா பரிவர்த்தனை என்ற கொள்கையினை அடையும் நோக்கத்தோடு அனைத்து தொழிலாளர்களையும் மக்கள் நிதி திட்டத்தின்கீழ் கொண்டுவர தமிழக அரசும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. எனவே அனைத்து தொழிற்சாலைகள், கட்டிடம் மற்றும் இதர கட்டுமான பணி மேற்கொள்ளும் நிறுவனங்களின் வேலை அளிப்பவர்கள் அனைவரும் ஒப்பந்த தொழிலாளர்கள், தற்காலிக தொழிலாளர்கள், பிற மாநில தொழிலாளர்கள் உட்பட அனைவருக்கும் வழங்க வேண்டிய ஊதியத்தை சட்ட வழிமுறைகளை பின்பற்றி காசோலை அல்லது வங்கி மின்னணு பரிவர்த்தனை மூலமாக மட்டுமே வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், சம்பள பட்டுவாடா சட்டம் 1936-ன் பிரிவு 5(1)ல் வரையறுக்கப்பட்டுள்ளபடி 1000 தொழிலாளர்கள் வரை பணி அமர்த்தும் தொழிற்சாலைகள் மற்றும் இதர நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பிரதி மாதம் 7-ம் தேதிக்குள்ளும், 1000 தொழிலாளர்களுக்கு மேல் பணிபுரியும் தொழிற்சாலைகள் மற்றும் இதர நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பிரதி மாதம் 10-ம் தேதிக்குள்ளும் தவறாது ஊதியம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply