குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் தண்டனை?
பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு சாதாரண குற்றங்களுக்கு விதிக்கப்படும் தண்டனையே வழங்கப்படுவதாகவும், இந்த குற்றங்களுக்கு எதிரான தண்டனை மிகவும் கடுமையாக்கப்பட வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு பெண் வக்கீல்கள் சங்கம் சார்பில் வக்கீல் அனிதா பாப்னா என்பவர் வாதாடினார்.
இதற்கு மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டார்னி முகுல் ரோகத்கி என்பவர் தனது வாதத்தின் போது, “பாலியல் வன்முறை மற்றும் அவை தொடர்பான குற்றங்களை பொறுத்துக் கொள்ள முடியாது என்றாலும் ஆண்மை நீக்கம் போன்ற தண்டனைகளை கோர்ட்டு பரிந்துரைக்க முடியாது என்றும் இதுபோன்ற குற்றங்களை தடுக்க உரிய தண்டனை வழங்குவதற்கு பாராளுமன்றத்தில் தேவையான சட்டம் இயற்றுவது அல்லது சட்ட திருத்தங்களை மேற்கொள்வது தான் சரியான வழியாக இருக்கும்’ என்றும் கூறினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இதுகுறித்து கருத்து தெரிவித்தபோது, “உணர்ச்சிகளின் அடிப்படையில் மட்டுமே குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை அளிக்கும் வகையில் சட்டங்களை இயற்ற முடியாது. இது போன்ற சட்டங்கள் அல்லது சட்ட திருத்தங்களை இயற்றும் அதிகாரம் கோர்ட்டுக்கு கிடையாது. பாராளுமன்றத்துக்கு மட்டுமே உள்ளது.
10 வயதுக்கு குறைந்த பெண் குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் மூர்க்கத்தனமான மனப்பிறழ்ச்சியே தவிர வேறு எதுவும் இல்லை. பாலுறவு, பலாத்காரம் என்றால் என்னவென்றே அறியாத 10 வயதுக்கு குறைந்த குழந்தைகளுக்கு ஏற்படுத்தப்படும் வலியும் வேதனையும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இது போன்ற வக்கிரமான காரியங்களை ஏற்றுக் கொள்ள முடியாது.
இத்தகைய குற்றங்களுக்கு மிகவும் கடுமையான தண்டனை விதிக்கும் வகையில் பாராளுமன்றம் சட்டம் இயற்ற வேண்டும். பாலியல் குற்றங்களின் அடிப்படையில் ‘குழந்தை’ என்பதற்கான சரியான விளக்கத்தையும் பாராளுமன்றம் சட்டத்தில் விவரிக்க வேண்டும். இந்திய தண்டனை சட்டத்திலும் தேவையான திருத்தங்களை செய்ய வேண்டும். இது நீதிமன்றத்தின் கருத்து மட்டுமே. இதனை ஏற்பதும் நிராகரிப்பதும் அரசின் முடிவுக்கு உட்பட்டது.
Chennai Today News: SC asks for harsher punishment of child rape accused