இந்தியா, இலங்கையை இணைக்கும் கடல் பாலம் சாத்தியமா? இலங்கை அமைச்சர் பதில்

இந்தியா, இலங்கையை இணைக்கும் கடல் பாலம் சாத்தியமா? இலங்கை அமைச்சர் பதில்

bridgeஇந்தியாவின் ராமேஸ்வரம் நகரில் இருந்து இலங்கையின் தலைமன்னார் பகுதி வரையிலான கடல் பாலம் அமைக்க வேண்டும் என இருநாட்டு மக்களும் கடந்த பல வருடங்களாக தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் இந்த பாலம் சாத்தியமில்லை என இலங்கை உயர்கல்வித் துறை அமைச்சர் லட்சுமண் கிரியல்லா நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து கேகாலையில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:

இலங்கைக்கு உள்ளேயே பல பாலங்களை அரசு அமைக்க திட்டமிட்டுள்ளது. ஆனால் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு பாலம் கட்டவுள்ளதாக கூறப்படுவதில் எந்த அர்த்தமும் இல்லை. இலங்கை அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் அடுத்தடுத்து குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர். முதலில், வாட் வரி விவகாரத்தை எழுப்பினர். அதைத் தொடர்ந்து, ஹனுமன் பாலம் (இந்தியா-இலங்கை இடையே பாலம் கட்டும் திட்டம்) விவகாரத்தை எழுப்புகின்றனர். ஹனுமனின் வாலைப் பிடித்துக் கொண்டு எதிர்க்கட்சியினர் தொங்கிக் கொண்டிருக்கின்றனர் என்று கூறினார்.

முன்னதாக, மூத்த எதிர்க்கட்சித் தலைவரும், எம்.பி.யுமான வாசுதேவ நாணயக்காரா கூறுகையில், “இந்தியா-இலங்கை இடையே பாலம் கட்டப்பட்டால், தமிழகத்தில் இருக்கும் 6 கோடி தமிழர்களும் இலங்கைக்குள் வந்துவிடுவார்கள்’ என்று எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். இதேபோல், மற்றோர் எதிர்க்கட்சி எம்.பி.யான உதய கம்மன்பிலா கூறுகையில், “இந்தியா-இலங்கை இடையே பாலம் கட்டப்படும்பட்சத்தில், அதை நான் உடைத்தெறிவேன்’ என்று எச்சரித்திருந்தார்.

இந்தியா-இலங்கை இடையே கடலுக்கு மேல் பாலம் கட்டும் திட்டம், இலங்கைப் பிரதமராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கேயின் மனதில் தோன்றியதாகும். இந்தத் திட்டத்தை கடந்த 2002, 2004-ஆம் ஆண்டுகளில் அவர் பிரதமராக இருந்தபோது முன்வைத்தார். அந்தத் திட்டத்துக்கு, ஹனுமன் பாலம் திட்டம் என்றும் அவர் பெயரிட்டு அழைத்தார். இதுதொடர்பாக இலங்கைத் தொழில்நுட்பக் கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட வரைபடத்தையும் விக்ரமசிங்க வெளியிட்டிருந்தார்.

ஆனால், ரணில் விக்ரமசிங்கவின் இந்நடவடிக்கையை அந்நாட்டில் உள்ள தீவிர தேசியவாதிகள் கடுமையாக எதிர்த்தனர். இந்தப் பாலம் கட்டப்பட்டால், இந்தியர்கள், இலங்கைக்குள் குவிந்து விடுவார்கள் என்று குற்றம்சாட்டி வருகின்றனர்.

அதைத் தொடர்ந்து, இந்த திட்டத்தின்மீது 2004 மற்றும் 2014-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், இந்தியா, இலங்கை அரசுகள் எந்த ஆர்வமும் செலுத்தவில்லை. இந்நிலையில், இந்தியாவில் பாஜக அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு அமைந்தபிறகு, இரு நாடுகளுக்கும் இடையே பாலம் கட்டப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்திருந்தார். ஆனால், இதுதொடர்பாக இலங்கையிடம் இந்திய அரசு திட்டம் எதையும் இதுவரை அளிக்கவில்லை

Leave a Reply