காங்கிரஸ் கட்சியுடன் தமாக இணைவது உண்மையா? ஜி.கே.வாசன் விளக்கம்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் போலவே தவறான முடிவு எடுத்து மக்கள் நலக்கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட ஜி.கே.வாசனின் தமாக, ஒரு தொகுதியில் கூட கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியுடன் தமாகவை இணைக்க ஜி.கே.வாசன் முடிவு செய்துவிட்டதாகவும் இதற்காக அவர் சோனியாவை சந்திக்க அப்பாயின்மெண்ட் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து கருத்து கூறிய ஜி.கே.வாசன், ‘‘காங்கிரசுடன் மீண்டும் இணையும் பேச்சுக்கே இடமில்லை’ என்று கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்றால் தமிழ்மாநில காங்கிரஸ்தான் என்ற நிலையை உருவாக்கி இருக்கிறோம். வருகிற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி பற்றி தேர்தல் அறிவிப்புக்கு பிறகுதான் முடிவு செய்யப்படும்.
டெல்லி, மும்பை என்று பல மாநிலங்களுக்கு செல்வேன். அதற்காக கற்பனையான வதந்திகளை பரப்புவது ஏற்கத்தக்கதல்ல. நாங்கள் காங்கிரசை விட்டு விலகி வெகுதூரம் வந்துவிட்டோம். பெருந்தலைவர் காமராஜர், மக்கள் தலைவர் மூப்பனார் வழியில் பயணித்து கொண்டிருக்கிறோம். உயிரோட்டமுள்ள முன்னணி இயக்கமாக த.மா.கா உருவாகி கொண்டிருக்கிறது. மீண்டும் காங்கிரசில் இணைவோம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
இவ்வாறு ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.