தமிழகத்தில் நடைபெற்று வரும் நடைப்பயணங்களால் எந்த மாற்றமும் ஏற்படாது. தமிழிசை செளந்திரராஜன்

தமிழகத்தில் நடைபெற்று வரும் நடைப்பயணங்களால் எந்த மாற்றமும் ஏற்படாது. தமிழிசை செளந்திரராஜன்
tamilisai
தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் அந்த மாற்றம் நடைப்பயணங்களால் ஏற்படாது. மக்கள் விரும்புவது திமுக, அதிமுக இல்லாத ஒரு மாற்றம்தான் என பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கூறியுள்ளார்.

திருச்சி ஆக்ஸ்போர்ட் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மேக் இன் இந்தியா கண்காட்சி துவக்கவிழாவில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழிசை, “தேசிய ஜனநாயக கூட்டணியில் முதல்வர் வேட்பாளரை தன்னிச்சையாக அறிவிப்பது நியாயமானது அல்ல, அப்படி அறிவித்தவர்கள் எங்களை கட்டாயப்படுத்த முடியாது. வரும் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சியினரும் இணைந்து பேச்சு வார்த்தை நடத்திய பின்புதான் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பதே நியாயமானது. ஆனால், எங்களது ஒரே குறிக்கோள் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் என்பதுதான்.

தற்போது, தமிழகத்தில் ஏராளமான நடைபயணங்கள் நடைபெற்று வருகிறது. அதனால், எந்த மாற்றமும் நடைபெறுவதில்லை. தமிழகத்தில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று மக்கள் விரும்புவதாக கருணாநிதி கூறி வருகிறார். ஆனால், மக்கள் விரும்புவது தி.மு.க., அ.தி.மு.க கட்சிகள் இல்லாத மாற்றம்தான். அந்த மாற்றம் பா.ஜ.க தலைமையிலான ஆட்சிதான். தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க அல்லாத மாற்றத்தை விரும்பும் கட்சிகளை ஒருங்கிணைத்து தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமையில் தேர்தலை சந்திப்போம். திராவிட கட்சிகள் இலவசங்களை வழங்குகிறார்கள்.ஆனால், நாங்கள் வீட்டிற்கு ஒருவருக்கு வேலை கொடுப்போம் என்கிறோம். அப்படி வேலை கொடுத்தால் இவர்கள் கொடுக்கும் மிக்‌சி, கிரைண்டர்களை மக்களே வாங்கிக்கொள்வார்கள். அதுதான் எங்கள் இலக்கு.

கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தொழில் தொடங்குவதற்கு உகந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 142 இடத்தில் இருந்தது. தற்போது அது 130 இடத்திற்கு முன்னேறி வந்திருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்வர் ஜெயலலிதா நடத்தினார். அது நல்ல விஷயம் தான். ஆனால், இங்கு தொழில் தொடங்குவதற்கான வசதிகளை அவர் செய்யவில்லை. மேலும், இங்கு மின் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால், தற்போது உள்ள தொழிற்சாலைகளும் மூடப்பட்டு வருகிறது.

மின் பற்றாக்குறையை போக்குவதற்காக எல்.இ.டி. பல்புகளை ஒழித்தால், 75 மின்பற்றாக்குறையை குறைக்கலாம் என நாங்கள் கூறி வருகிறோம். ஆனால், அதை தமிழக அரசு நடைமுறைப்படுத்தவில்லை. இந்தியாவில் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இதை அமல்படுத்தியிருக்கின்றனர். ஆனால், தமிழக அரசு செய்யவில்லை.

வரும் ஆண்டில் ஜல்லிக்கட்டு நிச்சயம் நடைமுறைப்படுத்தப்படும். தவறுதலாக பிராணிகள் வதை சட்டத்தின் கீழ் ஜல்லிகட்டு வந்துவிட்டது. இதை எதிர்த்து அறிக்கை வெளியிட்டுள்ளோம். இது தமிழக பண்பாட்டை சார்ந்த, வீர விளையாட்டு என்றும், இதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் பாஜக சார்பில் தெரிவித்துள்ளோம். எனவே, வரும் ஆண்டில் ஜல்லிக்கட்டு நடக்க முழு முயற்சியில் ஈடுபடுவோம். பா.ஜ.க. மதவாத கட்சி என்றும், தலித் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான கட்சி என்று தவறான தகவல் பரவவிடப்பட்டுள்ளது.

ஜாதி, மதம், இனம், மொழி, கலாச்சாரம் என எந்த வேறுபாடுகளும் இல்லாமல் அனைத்துத் தரப்பு மக்களின் முன்னேற்றுத்துக்காகவும் பிரதமர் நரேந்திர மோடி பாடுபட்டு வருகிறார். ஆனால், நாட்டில் நடந்து வரும் நல்ல விஷயங்கள் அனைத்தையும் மறந்துவிட்டு எந்த மாநிலத்தில் எது நடந்தாலும், எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் மோடி மீது குற்றம் சாட்டுகின்றனர். தலித்களுக்கு எதிராக மோடி அரசு செயல்படுவதாக திட்டமிட்டு பொய்ப் பிரசாரம் செய்து வருகின்றனர். இது கடும் கண்டனத்துக்குரியது. பா.ஜ.க.வில் 45 எம்.பி.க்கள் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தலித்கள் 4 பேர் மத்திய அமைச்சர்களாக உள்ளனர். பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு தலித்துகள் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பா.ஜ.க.வில் பல முக்கியப் பொறுப்புகளில் தலித் சமூகத்தினர் உள்ளனர்.

தலித்துகள் தொழில் துறையில் சாதிப்பதற்காக புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் மறைத்துவிட்டு, மாட்டிறைச்சி அரசியலை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளனர். எதிர்க்கட்சிகளின் இரட்டை நிலையை தலித்துகள் புரிந்து கொள்வார்கள். பா.ஜ.க.வை தொடர்ந்து ஆதரிப்பார்கள்

”கச்சத்தீவு இரு நாடுகளுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் சம்பந்தப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில்தான் கச்சத்தீவு தாரை வார்ப்புக்கான கையெழுத்தை போடப்பட்டது. ஆனாலும், கச்சத்தீவின் அவசியம் குறித்து நாங்கள் உணர்ந்திருக்கிறோம் நிச்சயம் நல்ல முடிவை எடுப்போம்” என்றார்.

Leave a Reply