விஜய்யுடன் மோத விரும்பவில்லை. சூர்யா
இளையதளபதி விஜய் நடித்துள்ள ‘தெறி’ திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வரும் தமிழ்ப்புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் தேதி இந்த படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் சூர்யா மூன்று வேடங்களில் நடித்துள்ள ’24’ படமும் அதே நாளில் வெளியாகும் என்றும் மீண்டும் ஒருமுறை விஜய்-சூர்யா படங்கள் மோதவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன.
இந்நிலையில் சூர்யா தரப்பில் இருந்து இன்று பதிவு செய்யப்பட்ட ஒரு டுவீட்டில், ‘ஏப்ரல் 14ஆம் தேதி கண்டிப்பாக ஒரு பெரிய படம்தான் வெளிவரும். இதுகுறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ‘தெறி’ மற்றும் ’24’ படங்களின் பட்ஜெட்டை கணக்கில் கொண்டு ஏப்ரல் 14-ல் எந்த படத்தை ரிலீஸ் செய்வது என்ற பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ’24’ திரைப்படம் ஏப்ரல் 14-ல் வெளிவர வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் விஜய்யின் தெறி படத்துடன் மோத சூர்யா விரும்பவில்லை என்பது புரியவருகிறது. முதல் மூன்று நாட்களில் வசூல் மிகவும் முக்கியம் என்பதால் ஒரு பெரிய படம் வெளிவந்தால் மட்டுமே நல்ல வசூலை பெற முடியும் என்பதை இரண்டு படங்களின் தயாரிப்பாளர்களும் உணர்ந்துள்ளனர்.