கமிஷனர் அலுவலகத்தில் நேரடியாக புகார் கொடுக்க தடை.

முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள் ஆகியோர் கமிஷனர் அலுவலகத்தில் நேரடியாக சென்று புகார் அளிக்கும் வழக்கம் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. இந்த முறைக்கு முடிவு கட்டுவது போன்று ஒரு அதிரடி உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் ‘பல வி.ஐ.பிக்கள் நேரடியாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து புகார் மனு கொடுக்கின்றனர். இது ஒரு தவறான முன் உதாரணம் ஆகும். ஆனால் புகார் மனுக்களை நேரடியாக தலையிட கமிஷனர் அலுவலகத்திற்கு எவ்வித அதிகாரமும் இல்லை. புகார்கள் சம்மந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் மட்டுமே அளிக்க வேண்டும். அங்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உதவி கமிஷனர் அல்லது துணை கமிஷனர் ஆகியோருக்கு புகார் அனுப்ப வேண்டும், அதன்பிறகு நடவடிக்கை இல்லையென்றால் மட்டுமே நேரடியாக கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று புகார் கொடுக்க வேண்டும்.

இந்த அதிரடி உத்தரவு காரணமாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ‘இனி இந்த அலுவலகத்தில் புகார் மனுக்கள் நேரடியாக பெறப்படமாட்டாது’ என அறிவிப்பு ஒட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறைக்கு பொதுமக்கள் பலர் வரவேற்றுள்ளனர். பரபரப்பை ஏற்படுத்தவேண்டும் என்றே சில சினிமா நட்சத்திரங்கள் உள்பட பலர் நேரடியாக கமிஷனர் அலுவலகம் சென்று புகார்கள் கொடுக்கின்றனர். இந்த முறையை தற்போது நீதிமன்றம் மூலம் முடிவு கட்டப்பட்டுள்ளது.

Leave a Reply