‘எங்க வீட்டு பிள்ளை’ டைட்டில் இல்லை. விஜய் 60′ படக்குழு அறிக்கை
இளையதளபதி விஜய் நடிப்பில் பரதன் இயக்கி வரும் திரைப்படத்திற்கு ‘எங்க வீட்டு பிள்ளை’ டைட்டில் வைக்கக்கூடாது என்றும் மீறி இந்த டைட்டிலை வைத்தால் போராட்டம் நடத்தவுள்ளதாக எம்.ஜி.ஆர் விசுவாசிகள் கூறியுள்ள நிலையில், ‘விஜய் 60’ படத்திற்கு ‘எங்க வீட்டு பிள்ளை’ டைட்டில் வைக்கும் திட்டம் எதுவும் எங்களிடம் இல்லை என விஜய் 60′ படக்குழுவினர் அறிக்கை ஒன்றின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளனர்.
‘விஜய் 60’ படக்குழுவினர்களின் அறிக்கை இதுதான்: பி.வெங்கட்ராம் ரெட்டி வழங்கும் விஜயா புரடொக்ஷன்ஸ் பி.பாரதி ரெட்டி தயாரிப்பில் இளையதளபதி விஜய்யின் ‘தளபதி 60’ படத்துக்கு ‘எங்க வீட்டு பிள்ளை’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது என்ற பொய்யான தகவலும் புரளியும் பரவி வருகிறது.
இதற்கு சில தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இது முற்றிலும் தவறான செய்தியாகும். ‘எங்க வீட்டு பிள்ளை’ என்னும் இத்தலைப்பை சூட்டும் எண்ணம் எங்களுக்கு இல்லை. இப்படத்திற்கு தலைப்பு வைப்பது பற்றி நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை.
சிலரால் பரப்பப்படும் பொய்யான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். படத்தின் தலைப்பை பற்றிய அதிகாரபூர்வ தகவல் எங்களிடம் இருந்து சரியான நேரத்தில் வெளிவரும்’ இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.