ஆட்சிக்கு வந்தவுடன் இலவசங்களை நிறுத்துவேன். அன்புமணி ராமதாஸ்

ஆட்சிக்கு வந்தவுடன் இலவசங்களை நிறுத்துவேன். அன்புமணி ராமதாஸ்

anbumaniகடந்த 50 ஆண்டுகளாக தமிழக மக்களை இலவசங்கள் கொடுத்து திமுக மற்றும் அதிமுக கட்சிகள் ஏமாற்றி வருவதாகவும் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் இலவசங்களை நிறுத்துவோம் என்றும் பாமகவின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்ட பா.ம.க. மகளிர் சங்கம் சார்பில் நடைபெற்ற மதுஒழிப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட பா.ம.க. இளைஞர் அணி தலைவரும், முதல்வர் வேட்பாளருமான அன்புமணி ராமதாஸ் பேசியபோது, “’50 ஆண்டுகளாக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் இலவசங்களை கொடுத்து பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர். பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் இலவசங்களை கொடுக்கமாட்டோம். மாறாக இலவசகல்வி, படித்த அனைவருக்கும் வேலைவாய்ப்பு கொடுப்போம். சுயமரியாதையுடன் வாழ வழிவகை செய்வோம். ஒவ்வொருவர் குடும்பத்திலும் முன்னேற்றம் கொண்டுவருவோம். ஒருகாலத்தில் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே மது குடிப்பார்கள். ஆனால் தற்போது 12 வயது மாணவன் மதுகுடிக்கும் அவலநிலை உள்ளது.

மதுவால் ஏராளமான இளைஞர்கள் விபத்து மற்றும் நோய் பாதிப்பால் இறந்து விடுகின்றனர். இதனால் இளம் விதவைகள் அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் மாறி உள்ளது. இதுதவிர மதுவால், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வருகிற சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. நிச்சயம் வெற்றிபெறும். அப்போது நான் போடும் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்காக தான் இருக்கும்.

மேலும், டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு, அதில் பணியாற்றும் பணியாளர்களுக்கு அரசுவேலை கொடுப்போம். மேலும் தாலுகா வாரியாக மீட்பு மறுவாழ்வு மையம் தொடங்குவோம். அதனால் பா.ம.க.வுக்கு ஆதரவு தாருங்கள். உங்கள் குடும்பம் முன்னேறும். என்னால் 5 ஆண்டுகளில் அடுத்த 50 ஆண்டுகளுக்கான திட்டத்தை தீட்டி, மாற்றத்தை கொண்டுவர முடியும்.

பா.ம.க. வெற்றி பெற்று நான் முதலமைச்சராக பதவி ஏற்றால், தேர்தல் அறிக்கையில் சொல்லிய அத்தனை திட்டங்களையும் 2 ஆண்டுகளில் நிறைவேற்றுவேன். ஒருவேளை செய்யமுடியவில்லை என்றால் பதவி விலகுவேன்”

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார்

Leave a Reply