கவர்னர் பதவி தேவையில்லை. முதல்வர் கூட்டத்தில் நிதிஷ்குமார் வலியுறுத்தல்
புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற 1-ஆவது மாநில முதல்வர்கள் கூட்டத்தில் அனைத்து மாநிலங்களிலும் கவர்னர் பதவியை நீக்க வேண்டும் என்று பிகார் முதல்வர் நிதீஷ் குமார் வலியுறுத்தியுள்ளார். அவரது பேச்சுக்கு மற்ற மாநில முதல்வர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தில் நிதிஷ்குமார் மேலும் பேசியதாவது:
அனைத்து மாநிலங்களிலும் கவர்னர் பதவியை நீக்க வேண்டும். ஒருவேளை, அந்தப் பதவியை நீக்க இயலாத பட்சத்தில், கவர்னருக்கான அதிகாரம் குறைக்கப்பட வேண்டும்.
அதேபோல், ஒரு மாநிலத்துக்கு கவர்னர் நியமிக்கப்படும்போதும், அந்தப் பதவியிலிருந்து அவர் நீக்கப்படும்போதும் சம்பந்தப்பட்ட மாநில முதல்வரிடம் கலந்தாலோசிக்க வேண்டும். கவர்னர் பதவி நியமனம், நீக்கம் என இரண்டு முறைகளிலும் சம்பந்தப்பட்ட மாநில முதல்வரின் பங்கு இருக்க வழிவகை செய்ய வேண்டும்.
மற்றொரு ஆலோசனையையும் முன்வைக்க விரும்புகிறேன். அதாவது, கவர்னகளை நியமிப்பது தொடர்பான விதிமுறைகள் தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும். அவர்களின் நியமனத்தில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த வேண்டும்.
சர்க்காரியா கமிஷனின் பரிந்துரைகள் கவர்னர் நியமனத்தில் பின்பற்றப்பட வேண்டும். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் மோகன் பன்ச்சி தலைமையிலான குழு அளித்த பரிந்துரைப்படி, சில சூழ்நிலையில், மாநில முதல்வரை நீக்க வேண்டிய தேவை எழுந்தால், அந்த மாநில முதல்வர் தனது பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் வாய்ப்பளிக்க வேண்டும். இவை அனைத்தும் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் இவ்வாறு பீகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்தார்.
இந்த கூட்டத்திற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.