காந்தி உள்பட தலைவர்கள் பிறந்த நாளுக்கு விடுமுறை இல்லை. உபி முதல்வரின் அடுத்த அதிரடி
காந்தியடிகள் உள்பட தலைவர்கள் பிறந்த நாளுக்கு இனி விடுமுறை கிடையாது என்றும் தலைவர்களின் பிறந்த நாள் அன்று மாணவர்களுக்கு தலைவர்களின் வாழ்க்கை குறித்து, மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அதிரடியாக அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளார்.
நேற்று சட்டமேதை அம்பேத்கரின் பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில் உ.பி மாநிலம் லக்னோவில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். அப்போது அவர் அம்பேத்கரின் சிறப்புகள் குறித்து எடுத்துரைத்துவிட்டு பின்னர் பிரபல தலைவர்களின் பிறந்த நாட்களில் பள்ளிக்கூடங்களுக்கு இனி விடுமுறை அளிக்கக் கூடாது என்று கூறினார்.
இதுபோன்ற விடுமுறை நாட்களால், பள்ளிக்கூடங்களில் வேலை நாட்கள் குறைவதாக குற்றம் சாட்டிய முதல்வர் மாணவர்கள் கல்வி கற்கும் நாட்கள் குறைந்து வருவதால் கல்வி பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டார். தற்போதைய சூழலில் மாணவர்களின் கற்கும் நாட்கள் 120ஆக இருப்பதைச் சுட்டிக் காட்டிய முதல்வர் இதற்கு முன்பு பள்ளி வேலைநாட்கள் 220 நாட்களாக இருந்தது என்று அவர் கூறினார்.
தலைவர்கள் பிறந்த நாளில் விடுமுறை இல்லை என்ற அறிவிப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர் மத்தியில் கடும் அதிர்ச்சியலையை ஏற்படுத்தியுள்ளது.