சீன பட்டாசுகளை இறக்குமதி செய்தால் கடும் நடவடிக்கை. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தொழில் வளர்ச்சியை அதிகரிக்க, தமிழக அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மேலும் சீனாவில் தயாராகும் பட்டாசுகளுக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளதாகவும், தடையை மீறி சீன பட்டாசுகள் இறக்குமதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், சீன பட்டாசுகளை இறக்குமதி செய்வதற்கும், உபயோகப்படுத்துவதற்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளதாகவும், இது சம்பந்தமாக தமிழகம் உள்பட அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதி இருப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மத்திய அரசு ‘மேக் இன் இந்தியா’ திட்ட கோஷத்தை முன்னெடுத்துவரும் நிலையில், நமது நாட்டு உற்பத்தியாளர் பாதிக்கப்படுவதை அரசு அனுமதிக்காது என்றும் தெரிவித்தார்
மேலும், சரக்கு சேவை வரி சட்டம் அமல்படுத்துவதற்கு காங்கிரஸ் கட்சி தடையாக உள்ளது என்று கூறிய நிர்மலா சீதாராமன், மக்கள் நலனுக்காக வரும் மழைக்கால கூட்ட தொடரில் சட்டத்தை இயற்ற ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.