அதிமுகவுடன் மறைமுக கூட்டணியா? இல.கணேசன் பதில்

அதிமுகவுடன் மறைமுக கூட்டணியா? இல.கணேசன் பதில்
ela.ganesan
பாஜக கூட்டணியில் விரைவில் அதிமுக இணையவுள்ளதாகவும் மத்திய அரசில் பங்கு பெறப்போவதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அ.தி.மு.க.வுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே மறைமுக உறவு எதுவும் இல்லை என்று பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த இல.கணேசன் கூறியதாவது: அ.தி.மு.க.வுக்கும், பா.ஜ.க,வுக்கும் இடையே மறைமுக உறவு எதுவும் இல்லை. சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் வந்தவுடன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மட்டுமின்றி கேரள முதல்வர் பினராயி விஜயன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோருக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்தார். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே நல்லுறவு வேண்டும் என்பதற்காகவே பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதை அரசியல் ஆக்கக் கூடாது.

நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு மாற்று தி.மு.க. என்று கருதியும், தி.மு.க. வரக் கூடாது என்று அ.தி.மு.க.வுக்கும் மக்கள் வாக்களித்துள்ளனர். உள்ளாட்சித் தேர்தலில் தற்போதைய பா.ஜ.க. கூட்டணியே தொடரும். மக்கள் நலக் கூட்டணி ஒரு பொருத்தம் இல்லாத கூட்டணி. தேர்தலில் வெற்றி பெறாததால் அதன் கூட்டணிக் கட்சிகள் தானாகப் பிரிந்துவிடுவது இயற்கையே.

கச்சத் தீவை மீட்க வேண்டும் என்பதுதான் பா.ஜ.க.வின் கொள்கை. இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அதனை இலங்கைக்குக் கொடுத்தார். அதற்கு பா.ஜ.க. அப்போதே எதிர்ப்பு தெரிவித்தது. கச்சத்தீவு நம்மிடம் இருந்தால் தமிழக மீனவர்களுக்கு எத்தகைய வசதிகள் கிடைக்குமோ அத்தனையையும் பெற்றுத் தர பா.ஜ.க. தற்போது முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதில் மத்திய அரசுக்கு தேவையான உதவிகளை அளிக்க இலங்கை அரசும் தயாராக உள்ளது.

இந்திய மீனவர்கள் கடல் எல்லை தாண்டி இலங்கையில் மீன் பிடிப்பதற்கு அந்நாட்டு அரசு தடை விதிக்கவில்லை. ஆனால், நமது மீனவர்கள் இரட்டை மடிப்பு வலையைப் பயன்படுத்தக் கூடாது என்பதுதான் அவர்களின் நிபந்தனை. மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைத்த பிறகு இதுவரை தமிழக மீனவர்கள் ஒருவர்கூட இலங்கை அரசால் சுட்டுக் கொல்லப்படவில்லை.

சரக்குப் பெட்டக லாரியில் கொண்டு வரப்பட்ட ரூ.570 கோடி திருப்பூர் அருகே கைப்பற்றப்பட்டது குறித்து, சம்பந்தப்பட்ட வங்கி உரிய விளக்கம் அளித்த பிறகும், இந்த விவகாரத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு அதில் பங்குள்ளதாக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவதூறாகக் கருத்து தெரிவித்துள்ளார். அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடுக்குமாறு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு கடிதம் எழுத உள்ளோம்”

இவ்வாறு இல.கணேசன் செய்தியாளர்களிடம் கூறினார்.

Leave a Reply