மெரீனாவில் ஜெயலலிதா நினைவிடம் வேண்டாம்: தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி
மெரினாவின் அழகை கெடுக்கும் வகையில் ஜெயலலிதா நினைவிடம் உள்பட எந்த கட்டிடமும் இனிமேல் கட்ட வேண்டாம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து என சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அவர்கள் வழக்கு ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து, உயர் நீதிமன்றத்தில், ‘டிராபிக்’ ராமசாமி, வழக்கறிஞர் துரைசாமி ஆகியோர் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு, தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி, நீதிபதி, பி.டி.ஆஷா அடங்கிய, ‘முதல் பெஞ்ச்’ முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி கூறியதாவது: உலகிலேயே, இரண்டாவது நீளமான கடற்கரையாக, மெரினா உள்ளது. இது, தமிழகத்துக்கு மட்டும் அல்ல, இந்தியாவுக்கேபெருமை சேர்ப்பதாகும். கடற்கரை சாலையில் போகும் போது, மெரினாவின் அழகை, எந்த இடையூறும் இன்றி, மக்கள் ரசிக்க வேண்டும். மெரினாவில், கட்டடம் எதுவும் கட்டக் கூடாது என்பது, என் தனிப்பட்ட கருத்து.
இருந்தாலும், இந்த வழக்கை பொருத்தவரையில், நீங்கள் எடுத்து வைக்கும் வாதங்களைப் பொறுத்து தான் எந்த உத்தரவு பிறப்பிக்க முடியும். இவ்வாறு தலைமை நீதிபதி கூறினார். அரசு தரப்பில் ஆஜரான, அட்வகேட் ஜெனரல், விஜய் நாராயண், ”நினைவிடத்தின் வரைபடத்தை தாக்கல் செய்கிறேன் என்று கூறியதையடுத்து, வரைபடத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை, நீதிபதிகள் ஒத்திவைத்தனர்