தமிழகத்தில் சென்னை தவிர அனைத்து இடங்களிலு இருந்த மின்வெட்டு நடைமுறை ஜூன்1 ஆம் தேதி முதல் அறவே நீக்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தான் ஏற்கனவே பொதுமக்களுக்கு உறுதியளித்தபடி, மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கு துணைபுரிந்த அனைவருக்கும் நன்றி கூறிய முதல்வர், தமிழ்நாட்டில் தான் பதவியேற்ற மூன்று ஆண்டுகளில் மின்வெட்டை அறவே நீக்குவதில் பெருமை அடைவதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2011ஆம் ஆண்டு தான் ஆட்சி பொறுப்பை ஏற்றபோது, தமிழ்நாடு மின்சார வாரியம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்தது. இவற்றை சீர் செய்வதற்காக பகீரத முயற்சிகளை தனது தலைமையிலான அரசு எடுத்த காரணத்தால், கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 2,500 மெகாவாட் அளவுக்கு புதிய மின் உற்பத்திக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 500 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் கொள்முதல் செய்ய ஒப்பந்தங்கள் போட்டுள்ளதாகவும் அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.’
மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாற்றியுள்ளதால் இனி தமிழகத்தில் தொழில் வளம் பெருகி, வேலை வாய்ப்புகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.