ஜெயலலிதா வெற்றிடத்தை நிரப்ப ஒருவரும் இல்லை. நாஞ்சில் சம்பத்
ஜெயலலிதாவுக்கு அடுத்த அதிமுக தலைவராக சசிகலாவை கிட்டத்தட்ட அனைத்து தலைவர்களும் ஏற்றுக்கொண்ட நிலையில் நாஞ்சில் சம்பத் மட்டும் முற்றிலும் மாறுபட்டு உள்ளார். ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தை சூன்யமாக பார்ப்பதாகவும், இந்த வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்றும் இந்த இடத்தை நிரப்புவதற்கு ஒருவரும் இல்லை என்றும் அவர் ஆணித்தரமாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
மேலும் ஜெயலலிதா மரணம் குறித்து அவர் கூறியபோது, ‘ இந்த மரணத்தில் அவிழ்க்கப்பட முடியாத பல மர்மங்கள் இருப்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்தபோது, அம்மாவை யார் பார்த்தார்கள் என்ற விவரங்கள்கூட தெரியவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னால் உடல் பரிசோதனைக்கு என அவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்திருக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது.
நீர்ச்சத்து குறைவு, காய்ச்சல் என அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு, படிப்படியாக நோய் வந்தது என்று அடுக்கிக்கொண்டே போனார்கள். அதன் பிறகு ‘தன்னைச் சுற்றி நடப்பதை எல்லாம் சரியாக தெரிந்துகொள்கிறார், வழக்கமான உணவை எடுத்துக்கொள்கிறார்’ என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், திடீரென அம்மா இந்த நிலைக்கு ஏன் ஆளானார் என்பது குறித்து சாதாரண பொதுமக்களுக்கு எழுகின்ற கேள்விகள் எனக்குள்ளும் எழுகின்றன.
சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று சசிகலா புஷ்பா வழக்கு போட்டிருப்பதன் மூலம், உண்மைகள் ஊர்வலம் வருமானால் எனக்கு மகிழ்ச்சிதான்.’’ என்று கூறியுள்ளார்.