என்னை யாரும் தூண்டவில்லை. யார் மீதும் பழிபோட வேண்டாம். ஓபிஎஸ்
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் நேற்று ஜெயலலிதாவின் நினைவிடத்தில் கூறிய அதிர்ச்சிகரமான உண்மைகள் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அவரை யாரோ பின்னால் இருந்து இயக்குவதாக சசிகலா உள்பட அதிமுக நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதற்கு தொலைக்காட்சி பேட்டி வழியாக பதிலளித்த ஓபிஎஸ் அவர்கள் தன்னை யாரும் பின்னால் இருந்து தூண்டவில்லை என்றும் திமுக, பாஜக உள்பட யார் மீதும் பழிபோட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: என்னை பின்னால் இருந்து தூண்டியதாக எதிர்கட்சியான திமுக., பாஜக., மீது குற்றம்சாட்டுவது தவறு. செய்யாத தவறுக்கு குற்றம்சாட்டுவது மிகவும் தவறு.
நான் சட்டமன்ற கூட்டத்தொடரின் போது எதிர்கட்சி உறுப்பினர்களை பார்த்து சிரித்ததால் திமுக., மீது குற்றம் சாட்டுவதோ… அல்லது ஜல்லிக்கட்டு விவகாரத்தின் போது பிரதமரை சந்தித்த பின் பாஜக., என் பின்புலமாக செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றது.
நான் தனிமையாக தான் உள்ளேன். தேவையில்லாமல் குற்றம்சாட்டுவது மிகவும் தவறு’ என்று கூறியுள்ளார்.