பிளாஸ்டிக் குப்பை இல்லாத சென்னை பொருட்காட்சி. தமிழக அரசு திட்டம்
சென்னை தீவுத்திடலில் வரும் டிசம்பர் மாதம் தொடங்கவுள்ள பொருள்காட்சியை பிளாஸ்டிக் குப்பைகள் இல்லாத தூய்மையான பொருள்காட்சியாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்
ஒவ்வொரு வருடமும் டிசம்பர் இறுதியில் தொடங்கும் பொருட்காட்சி இந்த வருடம் டிசம்பர் 3 -ஆவது வாரத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை தீவுத்திடலில் சுற்றுலாத் துறையின் சார்பில் 70 நாள்கள் வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ள இந்த பொருட்காட்சி நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை சுற்றுலாத் துறை தற்போது தொடங்கியுள்ளது.
மேலும் பொருட்காட்சியில் ஸ்டால்கள் போடுவதற்கான ஒப்பந்தப் புள்ளிகளையும் கோரியுள்ளது. அதில் சில முக்கிய அம்சங்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 170 கடைகள் அமைக்கப்பட இருப்பதாகவும், அவை பிளாஸ்டிக் பயன்பாடு ஏதும் இல்லாமல் அமைக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளது. இந்தப் பொருள்காட்சியில், தனியார் நிறுவனங்களின் காட்சி அரங்குகளுடன், அரசு சார்பிலான நிறுவனங்களும் அரங்குகளை அமைத்து தங்களது சாதனைகளை பட்டியலிட இருப்பது குறிப்பிடத்தக்கது.