வெயில் காலத்தில் வேண்டாமே பவுடர்
ஒவ்வொரு நாளும் புதுமையாகத் தோன்ற வேண்டும் என்பதற்காகப் பலரும் விதவிதமாக கவரிங் தோடுகள் அணிகிறார்கள். சிலருக்குத் தோடு போடும் இடத்தில் அலர்ஜியால் புண் வந்து அவதிப்படுகிறார்கள். அவர்கள் கடுக்காயை கல்லில் கெட்டியான விழுதாக அரைத்து, புண் இருக்கும் இடத்தில் பூசினால் விரைவில் குணமாகும். காதில் புண் ஆறும்வரை இரவில் காது ஓட்டையில் கறிவைப்பிலை குச்சியையோ வேப்பிலை குச்சியையோ தேங்காய் எண்ணெயில் நனைத்து போட்டுக் கொள்ளலாம்.
* சித்திரை பிறந்ததுமே வறுத்தெடுக்கத் தொடங்கிவிட்டது வெயில். அதைச் சமாளிக்க நாமும் தயாராக வேண்டாமா? உணவில் காரம், புளி, எண்ணெய் ஆகியவற்றை மிதமாகச் சேர்த்துக்கொள்ளுங்கள். பால், மோர் இரண்டையும் வழக்கத்தைவிட அதிகமாகச் சாப்பிடுங்கள். நீர்ச்சத்துள்ள பழங்களையும் அடிக்கடி சேர்த்துக்கொள்ளுங்கள். கம்பு, ராகி கூழ் வகைகளைக் குளிர்ந்த மோரில் கரைத்து, சிறியதாக நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
* வெயில் காலத்தில் பகல் உணவுக்கு முன்பு புளிப்பில்லாத மோரில் சிறிது கறிவேப்பிலையைச் சேர்த்துக் குடித்தால் நல்லது.
* இரவில் முகத்தைச் சுத்தமாகக் கழுவி, பவுடர் போடாமல் இருந்தால் வெயில் காலத்தில் வியர்வைத் துவாரங்கள் அடைபடாமல் இருக்கும். முகம் கருக்காது.
* நீண்ட நேரம் கணினியின் முன்பு அமர்ந்து வேலை செய்பவர்களுக்குச் சோர்வும் கண் எரிச்சலும் இருக்கும். அவர்கள் ஓய்வாக இருக்கும்போது கண்களை மூடி அதன் மேல் வெள்ளரிக்காய் வில்லைகளை வைத்து சிறிது நேரம் கழித்து எடுத்தால் ஓரளவு எரிச்சல் மட்டுப்படும்.
* வெயில் காலத்தில் சிலர் அடிக்கடி வாய்ப்புண் வந்து சிரமப்படுவார்கள். பெரிய நெல்லிக்காயைத் துருவி, வாயில் போட்டு அடக்கிக்கொண்டால் வாய்ப்புண் விரைவில் குணமாகிவிடும்.
* காய்ச்சலைவிட அதனால் நாவின் ருசி உணரும் திறன் குறைவதுதான் பலருக்கும் பெருங்கவலையாக இருக்கும். துளசி இலைகளை மென்று சாப்பிடட்டால், நாவின் சுவை உணரும் சக்தி வந்துவிடும்.
* சிலருக்கு என்ன செய்தாலும் முகப்பரு சீக்கிரத்தில் மறையாது. அவர்கள், வெண்சங்கைக் கல்லில் இழைத்து அதை எடுத்து முகப்பருவின் மேல் தடவிவந்தால் பரு மறைவதோடு, அது இருந்த அடையாளமும் மறைந்துவிடும்.
* செரிமானக் கோளாறு இருக்கிறவர்கள், இஞ்சியின் தோலைச் சீவி, துருவி நெய்யில் வதக்கி, சர்க்கரைப் பாகில் கலந்துவைத்துக் கொண்டு தினமும் சிறிதளவு சாப்பிட்டுவந்தால் தானாக ஜீரண சக்தி அதிகரிக்கும்.