தீர்ப்பை திருத்த முடியாது. ஜெ. பதவியேற்க தடையில்லை. சட்ட வல்லுனர்கள் கருத்து.

judgement 500சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பில் பிழை இருப்பதாக தமிழக எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டி வரும் நிலையில் நேற்று குமாரசாமி அவசர ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது. இந்நிலையில், தீர்ப்பில் திருத்தம் செய்யும் அதிகாரம் அவருக்கு இல்லை என  சட்ட வல்லுனர்கள் கூறியுள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பை திருத்தம் செய்யவோ, திரும்ப பெறவோ அல்லது அந்த தீர்ப்புக்கு தடை விதிக்கவோ அந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதிக்கு அதிகாரம் இல்லை என்று சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே ஜெயலலிதா வழக்கில் அவரது விடுதலைக்கு தடை விதிக்க குமாரசாமிக்கோ அல்லது கர்நாடக உயர் நீதிமன்றத்திற்கோ அதிகாரம் இல்லை என்று சட்ட நிபுணர்கள் கூறுவதாக கர்நாடக உயர் நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தீர்ப்பில் கூட்டல் கழித்தல் போன்ற எண்கள் தொடர்பான தவறுகள் இருந்தால், அதனை மட்டும் திருத்திக்கொள்ள தீர்ப்பு வழங்கிய குமாரசாமிக்கு அதிகாரம் உள்ளது என்றும், அதையும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பிய பின்னரே செய்ய முடியும் என்றும், அதே சமயம் அவ்வாறு செய்யப்படும் திருத்தங்களால் தீர்ப்பில் மாற்றம் ஏற்படும் என்றால் அந்த திருத்தத்தையும் செய்ய அவருக்கு அதிகாரம் இல்லை என்றும், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டின்போதே அத்தகைய தவறுகளை சுட்டிக்காட்ட முடியும் என்றும் சட்ட நிபுணர்கள் கூறுவதாக அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இந்த தகவல் வெளிவந்த காரணத்தால் ஜெயலலிதா தற்போதைக்கு முதல்வராக பதவியேற்பதில் தடையேதும் இல்லை என்றும், அவர் விரைவில் மீண்டும் முதல்வராக பதவியேற்பது குறித்த தகவல் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply