தமிழக முதல்வரை சந்திப்பதில் எனக்கு எந்த பிரச்சினையும் இருந்ததில்லை: நிர்மலா சீதாராமன்
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் மத்திய மின் துறை அமைச்சர், பியூஷ் கோயல் டெல்லியில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில் பேசியபோது, தமிழக மின் திட்டங்கள் குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தன்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், தமிழக மின் உற்பத்தியை மேம்படுத்துவது குறித்து பேச்சு நடத்த முதல்வர் ஜெயலலிதா முன் வரவில்லை என்றும் தெரிவித்திருந்தார். அதேபோல் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் முதல்வர் ஜெயலலிதாவை தானும் சந்திக்க முடியவில்லை என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில் மத்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று ஒரு பேட்டியில் கூறியபோது தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திப்பதில் தனக்கு எந்த பிரச்சினையும் இருந்தது இல்லை என்று கூறியுள்ளார்.
தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசுவது சிரமமாக இருந்ததாக மத்திய அமைச்சர்கள் பியுஷ் கோயல் மற்றும் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்த கருத்துக்களில் தனக்கு உடன்பாடில்லை என்றும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை என்று அந்த அமைச்சர்கள் கூறியிருப்பது அவர்களுடைய தனிப்பட்ட அனுபவமாக இருக்கலாம் என்றும் தெரிவித்த நிர்மலா சீத்தாராமன் தம்மை பொறுத்தவரையில் முதல்வரை சந்திப்பதில் சிரமம் ஏதும் இருக்கவில்லை என்று கூறினார். முதல்வர் ஜெயலலிதாவை தனது தமிழக பயணத்தின் போதும், டெல்லி வந்தபோதும் எளிதாக சந்திக்க முடிந்தது என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். பாஜக அமைச்சர்களுக்குள்ளே இருவேறு மாறுபட்ட கருத்து ஏற்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Chennai Today News: No problem to meet CM Jayalalitha says Nirmala Seetharaman