வருமான வரி செலுத்தும் நபர்களுக்கு ரேஷனில் பொருட்கள் வழங்குவதை நிறுத்தும் நடவடிக்கையை எடுக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய மத்திய உணவு மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார்.
புதிய உணவு சட்டத்தை அமல்படுத்தியுள்ள மாநிலங்களில் ஏழைகளுக்கு ரேஷன் கார்டுகளின் அடிப்படையில் இலவச பொருட்கள் மற்றும் மருந்துகள் கிடைப்பதில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே இந்த உதவிகள் தகுதியானவர்களுக்கும் மட்டும் போய் சேரவேண்டும் என்ற அடிப்படையில் வருமான வரி செலுத்துவோர் மற்றும் உயர்மட்ட அரசு அதிகாரிகளை பொது வினியோக திட்டத்தில் இருந்து எடுப்பது தொடர்பாக மத்திய அரசு பரிசீலித்து வருகிறது
பொது வினியோக முறையில் வழங்கப்படும் பொருட்கள் ஏழைகளை சென்று சேரவேண்டும். அரசின் நலத்திட்டங்களுக்கு தகுதியான ஏழைகளை கண்டுபிடிப்பதற்கு பதிலாக இந்த திட்டத்தில் இருந்து யாரெல்லாம் நீக்கப்படுகிறார்கள் என்பதை இதன் மூலம் எளிதில் கண்டுபிடிக்க முடியும் என நான் நம்புகிறேன். இதைப் போன்ற ஒரு திட்டத்தை மத்திய பிரதேச மாநில அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இது தொடர்பாக மாநில அரசுகளுடன் நான் விவாதிக்க உள்ளதாக ராம்விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார்.