உக்ரைன் விவகாரத்தில் உலக நாடுகளின் கடும் கண்டனங்களை பெற்று பொருளாதாரத்தடையும் பெற்றுள்ள ரஷ்யாவுடன் வணிக ஒப்பந்தங்கள் எதுவும் செய்து கொள்ள வேண்டாம் என இந்தியாவிடம் அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.
ரஷ்ய அதிபர் புதின் டிசம்பர் 10ஆம் தேதி இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார். இந்த வருகையின்போது இந்திய -ரஷ்ய நாடுகளுக்கு இடையே பல பொருளாதார ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது. இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவின் செய்தித்துறை செயலாளர் மேரி ஹார்ப் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், ”எங்களுக்கு பிடிக்காத சில விஷயங்கள் இருந்தாலும் பல நாடுகளுடன் நட்புறவை வளர்த்துக் கொள்வதில் தவறில்லை. எனக்கு தெரிந்த வரையில் ஒரு நாட்டின் அதிபரின் பயணம் மற்றொரு நாட்டு அதிபரின் வருகையை எந்த விதத்திலும் பாதிக்காது. முதலில் அதிபர் புதினின் வருகையால் என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். வர்த்தக, பொருளாதார ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக வதந்திகள் பரபரப்பப்படுகின்றன. நாங்கள் இதற்கு முன்னதாக என்ன சொல்லி வருகிறோமோ அதைத்தான் இப்போதும் சொல்கிறோம். ரஷ்யாவுடன் வியாபாரம் செய்வதற்கு இது சரியான நேரமல்ல.’ என்றார்.