கார்த்தி, லட்சுமி மேனன் நடித்த ‘கொம்பன்’ படம் வெளியானால் தென்மாநிலங்களில் ஜாதிப்பிரச்சனை தலைதூக்கும் அபாயம் இருப்பதால் இந்த படத்தை வெளியிட தடை செய்ய வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தாக்கல் செய்த மனு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே திட்டமிட்டபடி இன்று மாலை தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படுகிறது.
கொம்பன் படத்துக்கு எதிரான மனு, நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், வி.எஸ். ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ‘நீதிபதிகள், தணிக்கை வாரியம் இந்தப் படத்துக்கு ஏற்கெனவே சான்றிதழ் வழங்கியது. ஆட்சேபத்துக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டதாக சென்சார் வாரியம் தெரிவித்துள்ளது. எனவே, இந்தப் படத்தை நீக்கக் கோரும் இடைக்கால மனுவை இந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது. இருப்பினும், பிரதான மனு மீதான விசாரணை ஏப்ரல் 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது’ என்று நீதிபதிகள் அறிவித்தனர்.
இதையடுத்து, கொம்பன் திரைப்படம் உடனடியாக திரையரங்குகளில் வெளியாகும் எனத் தெரிகிறது.