தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ராஜினாமா செய்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில் இன்னும் புதிய தலைவரை காங்கிரஸ் கட்சியின் தலைமை அறிவிக்கவில்லை. ப.சிதம்பரம், திருநாவுக்கரசு, வசந்த்குமார், குஷ்பு உள்பட பலர் தலைவர் பதவிக்கு காய் நகர்த்தி வரும் நிலையில் திருநாவுக்கரசரை காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்ய பலத்த எதிர்ப்பு தோன்றியுள்ளது.
இதுகுறித்து தமிழகத்தின் 39 மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் கூறியிருப் பதாவது:
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் வர உள்ளது. ஆனால் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு இதுவரை யாரும் நியமிக்கப்படாதது வருத்தம் அளிக்கிறது. வீழ்ந்து கிடந்த நம் இயக்கம் எழுச்சியோடு அரசி யல் பயணம் செய்வதற்கு, கடந்த ஒன்றரை ஆண்டுகாலம் ஈவிகே எஸ் இளங்கோவன் தலைமையில் நாங்கள் ஆற்றிய பணியும், எங்களை அவர் இயக்கிய விதமும் அளப்பரியது. அது, தமிழகத்தில் உள்ள மற்ற அரசியல் கட்சிகள், பொதுமக்கள், ஊடகங்களின் பார்வையையும் காங்கிரஸை நோக்கித் திருப்பியது.
இந்த சூழலில், தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சு.திருநாவுக்கரசர் பெயர் பரிசீலிக்கப்படுவதாக வரும் செய்தி அதிர்ச்சி தருகிறது. திராவிட சிந்தனையோடு, மதவாத இயக்கத்தில் பயணித்தவரும், தமிழக அரசியல் வரலாற்றில் எந்த தலைமைக்கும், இயக்கத்துக்கும், விசுவாசத்தோடு பணியாற்றியதாக வரலாறு பதிவு செய்யாதவரும், சுயநலத்தோடு மட்டுமே சிந்திக்கும் ஒருவருக்கு, காமராஜர் வளர்த்த இயக்கத்தின் தலைமைப் பதவி தரப்படுமானால், அது காமராஜருக்கு செய்யும் துரோகமாகும்.
தேசிய சிந்தனையாளர்கள் யாரும் இவரது அரசியல் பய ணத்தை ஏற்கத் தயாராக இல்லை. தமிழக காங்கிரஸையும், தொண்டர்களையும் அரவணைத்துச் செல்லும் தலைமைதான் தேவை என்பதை பணிவோடு வலியுறுத் துகிறோம்.
தமிழகம் விரைவில் சந்திக்க உள்ள உள்ளாட்சித் தேர்தலிலும், 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் நாம் வெற்றி வியூகத்தை அமைக்க வேண்டும். அதனால் எந்த கட்சி யிலும் நம்பகத்தன்மை இல்லாது பணியாற்றிய திருநாவுக்கரசர் போன்றவர்களின் கரங்களில் காங்கிரஸ் தலைமை சென்றுவிடக் கூடாது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள், அரசியல் கட்சிகளால் நாம் புறக்கணிக்கப்பட்ட நிலையில், 2016 சட்டப் பேரவை தேர்தலில் திமுகவின் துணையோடு வாக்கு சதவீதம் அதிகரித்தது. இந்த நிலையில், தமிழகத்தில் 3-வது அரசியல் இயக்கமான நமது வலிமையை குறைக்கும் வகையில் புதிய தலைவர் நியமனம் அமைந்துவிடக் கூடாது. நமது இயக்கத்துக்கும், சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் ஒப்பற்ற தலைமைக்கும், நம்பிக்கைக்கும், விசுவாசம் கொண்ட தேசிய உணர்வாளர் ஒருவரை தலைவராக நியமித்தால், நமது இயக்கம் வலுப்பெற நாங்கள் என்றைக்கும், எதையும் எதிர்பாராமல் பணியாற்றுவோம். சோனியாகாந்தியும், ராகுல் காந்தியும் எங்கள் உணர்வுக்கு மதிப்பளிப்பார்கள் என நம்புகிறோம்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.