இந்தோனேஷிய சுனாமியால் இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை. வானிலை அதிகாரிகள் தகவல்
தென்கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேஷியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு அப்பகுதி மக்களை பெரும் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில் நேற்று இரவு மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் இந்தியாவுக்கு சுனாமி எச்சரிக்கை முதலில் விடப்பட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் இந்தியாவுக்கு சுனாமி உள்பட எவ்வித ஆபத்தும் இல்லை என தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது
இந்தோனேஷ்யா நாடு புவித்தட்டுகள் நகரும் இடத்தில் சரியாக அமைந்துள்ளதால், அங்கு அடிக்கடி நில நடுக்கம் ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் தேதி 9.1 புள்ளி அளவிலான மிகவும் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி ஏற்பட்டு சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்தில் அந்த சுனாமி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்தோனேசியாவில் நேற்று அந்நாட்டு நேரப்படு மாலை 6.50 மணிக்கு 7.9 ரிக்டர் அளவில் மிகப்பெரிய நில நடுக்கம் ஏற்பட்டது. முதலில் இது ரிக்டர் அளவுகோலில் 8.2 புள்ளி அளவிலான நில நடுக்கம் என அமெரிக்க புவியியல் மையம் மதிப்பிட்டது. ஆனால் பின்னர் அது 7.9 என உறுதி செய்யப்பட்டது. இந்த நில நடுக்கம் மேற்கு சுமத்ரா தீவில், பாடாங் நகருக்கு தென்மேற்கில் 808 கி.மீ. தொலைவில், 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
சில நொடிகள் மட்டுமே நீடித்த இந்த நிலநடுக்கத்தினால் பாடாங் என்ற நகரில் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளுக்கும், திறந்தவெளி மைதானங்களுக்கு ஓடினர்.
இந்த நில நடுக்கத்தால் உயிர்ச்சேதம், பொருட்சேதம் ஆகியவை இல்லை என்றும் ஆனால் மேற்கு சுமத்ரா, வடக்கு சுமத்ரா, ஆஷ், கிறிஸ்துமஸ் தீவு, கோகோஸ் தீவு பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் இடையே குறிப்பாக கடலோர பகுதி மக்களிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இந்தியாவுக்கு இந்த நிலநடுக்கத்தால் எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் இருப்பினும் நிலைமையை இந்திய அரசு உயரதிகாரிகள் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் வானிலை வட்டாரங்கள் கூறி வருகின்றன.