பாலியல் புகார் எதிரொலி: நோபல் பரிசு அகாடமி உறுப்பினர்கள் ராஜினாமா
நோபல் பரிசு வழங்கும் ஸ்வீடன் அகாடமி உறுப்பினர்கள் மீது சமீபத்தில் பாலியல் புகார் எழுந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து 4 நிரந்தர உறுப்பினர்கள் உட்பட 6 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்லது.
இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஆண்டுதோறும் இலக்கியத்தில் சிறந்து விளக்கும் நபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த நபரை ஸ்வீடன் நாட்டின் இலக்கிய மன்றமான ஸ்வீடன் அகாடமி தேர்ந்தெடுத்து வருகிறது.
இந்நிலையில், ஸ்வீடன் அகாடமியில் உறுப்பினராக உள்ள கத்ரீனா புரோஸ்டென்சனின் கணவர் ஜீன் கிளவுட் அர்ணால்ட் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டது. மேலும், முறையான அறிவிப்பிற்கு முன்னர் நோபல் பரிசு வெற்றியாளர்களின் பெயர் வெளியிடப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, இந்தாண்டு வழங்கப்பட இருந்த இலக்கியத்திற்கான நோபல் பரிசு அடுத்தாண்டு வழங்கப்படும் என ஸ்வீடன் அகாடமி அறிவித்திருந்தது.
பாலியல் சர்ச்சை, மற்றும் நிதி மோசடி புகாரினால் அகாடமி உறுப்பினர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, அகாடமியின் முதல் பெண் நிரந்தர செயலாளரான சாரா டனியஸ் பதவி விலகினார். மேலும், 5 உறுப்பினர்கள் தங்கள் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். அதற்கு அகாடமி அனுமதி வழங்கியது.
இதனால் அகாடமியில் 10 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். புதிய உறுப்பினர்கள் விரைவில் தேர்தெடுக்கப்படுவார்கள் என அகாடமி அதிகாரிகள் தெரிவித்தனர்