விஜய் மல்லையாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது உத்தரவு.
இந்தியாவில் உள்ள பிரபல வங்கிகள் அனைத்திலும் சுமார் 9,0000 கோடி கடன் வாங்கி அதனை கட்டாத பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, தற்போது வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிட்டதாக கூறப்படும் நிலையில் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது உத்தரவு ஒன்றை ஐதராபாத் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விஜய் மல்லையாவுக்கு சொந்தமாக இருந்த கிங் ஃபிஷர் நிறுவனம் பிரபல கட்டமைப்பு நிறுவனமான ஜி.எம்.ஆர் என்ற நிறுவனத்திற்கு கொடுத்த செக் ஒன்று போதிய பணம் இல்லாமல் திரும்ப வந்ததால், அந்த நிறுவனம், கிங்ஃபிஷர் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தது. ஜி.எம்.ஆர் நிறுவனம்தான் ஐதராபாத் சர்வதேச விமான நிலையத்தை கட்டியது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிறுவனம் தாக்கல் செய்த செக் மோசடி வழக்கு கடந்த மார்ச் மாதம் 10ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, விஜய் மல்லையா மற்றும் கிங்ஃபிஷர் நிறுவன உயரதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் என்று ஐதராபாத் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அதற்கு முன்னரே விஜய் மல்லையா ரகசியமாக இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு சென்றுவிட்டதால் நீதிமன்றத்தில் அவர் ஆஜராகவில்லை
மேலும், தற்போது இந்தியாவுக்கு வருவதற்கான தருணம் சரியாக இல்லை என்றும், தன்னால் நேரில் ஆஜராக முடியவில்லை என விஜய் மல்லையாவின் வழக்கறிஞர் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொள்ளாத நீதிபதி விஜய் மல்லையா மற்றும் கிங் ஃபிஷர் நிறுவன உயரதிகாரிகளுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. இந்த வழக்கு விசாரணை வருகின்ற ஏப்ரல் 13-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.