சென்னை மின்வெட்டுக்கு கடன்பாக்கி செலுத்தாதது காரணமா?
மின்சார கட்டணம் செலுத்தவில்லை என்றால் மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்துவிடுவார்கள் என்றுதான் இதுவரை கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் முதல்முறையாக மின்வாரியம் செலுத்த வேண்டிய கடன் பாக்கிக்காக மின் உற்பத்தி நிலையம் தமிழக மின்சாரத்துறைக்கு மின் விநியோக செய்ய மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
நேற்று இரவு சென்னையின் பெரும்பாலான இடங்களில் மின் தடை ஏற்பட்டு சென்னையின் முக்கிய பகுதிகள் இருளில் மூழ்கியது. குறிப்பாக வேப்பேரி, அண்ணாசாலை, தண்டையார் பேட்டை, புதுப்பேட்டை, அண்ணாநகர், புளியந்தோப்பு, ராயபுரம் பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. வெளில் காலம் என்பதால் இரவிலும் உஷ்ணம் இருக்கும் நிலையில் வெப்பம் தாங்காமல் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளானார்கள். நள்ளிரவு 2 மணிக்கு ஒருசில இடங்களிலும், அதிகாலை 4 மணிக்கு ஒருசில இடங்களிலும் மீண்டும் மின் விநியோகம் தொடங்கியது. மயிலாப்பூர் போன்ற பகுதிகளுக்கு இன்னும் மின் விநியோகம் கிடைக்கவில்லை
இந்நிலையில் வல்லூர் அனல் மின் நிலையத்திற்கு தமிழக அரசு செலுத்த வேண்டிய கடன் பாக்கி நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு மின்வாரியம் ரூ.1156 கோடி கடன் பாக்கியை வல்லூர் அனல் மின் நிலையத்திற்கு செலுத்த வேண்டி உள்ளது. அதனை செலுத்தாததால் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிவிட்டு மின் தடை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த தகவல் உண்மையில்லை என்றும், மின் தடைக்கு தண்டையார் பேட்டை துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட பழுது தான் காரணம் என்று மின்சாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.