அமெரிக்க அதிபர் யாராக இருந்தாலும் கவலையில்லை. வடகொரியா அதிரடி
அமெரிக்கா உள்பட பல உலக நாடுகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கி வரும் வடகொரியா, அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து கண்டுகொள்ளவே இல்லை என்று கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் யாராக இருந்தாலும் அணு ஆயுத விஷயத்தில் வடகொரியா தன்னுடைய நிலையை மாற்றும் நிலையில் இல்லை.
இதை உறுதிப்படுத்துவதை போல ஐக்கிய நாடுகள் சபைக்கான வடகொரியா நாட்டின் பிரதிநிதி கிம் யாங் ஹோ, புதிய அமெரிக்க அதிபர் குறித்து கூறியபோது, ‘அமெரிக்காவின் அதிபராக யார் பொறுப்பேற்றாலும் எங்களுக்கு கவலை இல்லை, ஆனால், எங்களுக்கு எதிரான தீண்டாமை மனப்போக்கை மாற்றிக்கொள்ளும் அரசியல் நிலைப்பாட்டை அமெரிக்கா மாற்றிக்கொள்ளுமா? இல்லையா என்பதுதான் தலையாயப் பிரச்சனை’ என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது, ‘வடகொரியாவின் அணு ஆயுத திட்டங்களை கைவிடுமாறு அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன்-ஐ சந்தித்துப் பேசுவேன் என டிரம்ப் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே டிரம்ப் பதவியேற்றவுடன் வடகொரியா விஷயத்தில் அமெரிக்கா என்ன நிலை எடுக்கபோகிறது என்பதை அறிய உலக நாடுகள் ஆவலுடன் காத்திருக்கின்றன.