தென்கொரிய அதிபர் மாளிகையை தகர்க்க வடகொரியா திட்டமா? அதிர்ச்சி தகவல்
கடந்த பல வருடங்களாக தென்கொரியா மற்றும் வடகொரியா நாடுகளுக்கு ஏழாம் பொருத்தமாக இருந்து வருகிறது. தென்கொரியாவை அச்சுறுத்துவதற்காகவே அவ்வப்போது வடகொரியா அணுகுண்டு ஏவுகணை சோதனையை செய்து வருகிறது. தென்கொரியாவுக்கு அமெரிக்கா உள்பட பல்வேறு உலக நாடுகளின் ஆதரவு இருந்தபோதிலும் வடகொரியாவால் எந்த நேரமும் தாக்கப்படும் அபாயத்தில் உள்ளது.
இந்நிலையில் தென்கொரிய அதிபர் மாளிகையை தாக்குவதற்காக வடகொரியா ஒத்திகை பார்த்ததாக வெளிவந்துள்ள தகவல் அதிர்ச்சியை அளித்துள்ளது. தென் கொரியாவில் அதிபராக இருந்த பார்க் கியுன் ஹே சமீபத்தில் பாராளுமன்றத்தால் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்நாட்டின் பிரதமரான ஹுவாங் கியோ ஆஹ்ன் தற்காலிக அதிபராக பொறுப்பேற்றுள்ளார். தென்கொரியாவில் அரசியல் சூழ்நிலை சரியில்லாத இந்த நேரத்தை பயன்படுத்தி அதிபர் மாளிகையை வடகொரியா தாக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
வடகொரியா செய்த போர் ஒத்திகையை தொலைநோக்கி வழியாக வடகொரியா அதிபர் கிம் ஜாங்-உன் மகிழ்ச்சி அடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளீயிட்டுள்ளன. நம்மை எதிர்த்து தாக்குதல் நடத்தும் திறன் தென்கொரியாவிடம் இல்லை. இதுபோக, நமது தாக்குதலில் தப்பிப் பிழைத்து ஒளியவும் அவர்களுக்கு வழியில்லை என கிம் ஜாங்-உன் கூறியதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.