அமெரிக்காவுக்கு எதிராக அணு ஆயுதத்தை பயன்படுத்த தயாராக இருக்கின்றோம். வடகொரிய அதிபர் எச்சரிக்கை
உலகின் வல்லரசாகவும், அனைத்து நாடுகளின் விஷயங்களிலும் மூக்கை நுழைத்து தனது அதிகாரத்தை செலுத்தி வரும் அமெரிக்காவை எதிர்த்து அறிக்கை விடும் தலைவர்களில் ஒருவர் வடகொரிய அதிபர் கிம் ஜோங். கிட்டத்தட்ட வாரம் ஒருமுறை அமெரிக்காவை எதிர்த்து அறிக்கை விட்டுக்கொண்டிருக்கும் இவர் நேற்று விடுத்த எச்சரிக்கை அறிக்கை இதோ:
“அமெரிக்கா மற்றும் அதன் கூட்டு நாடுகள் எங்களிடம் தொடர்ந்து விரோதப் போக்கை காட்டினால் அதற்கு நாங்கள் பதில் அளிக்க தயாராக உள்ளோம். எங்களது மையங்களை அணு ஆயுதங்களால் நிரப்பியுள்ளோம். எந்த நேரத்திலும் எதிரிக்கு பதில் கூற அவை தயாராக உள்ளன. அமெரிக்காவுக்கு எதிராக அணு ஆயுதத்தை எந்த நேரத்திலும் பயன்படுத்த தயாராக இருக்கின்றோம்’ என்று கூறியுள்ளார்.
மேலும் வட கொரியாவின் அணு ஆயுத மையமான யோங்பியான் மீண்டும் செயல்பட தொடங்கியதாக வட கொரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த மையத்தில் யுரேனியம் மற்றும் ப்ளூட்டோனியம் உற்பத்தி மிகப் பெரிய அளவில் இருந்து வருவதால் அமெரிக்கா உள்பட உலக நாடுகள் பெரும் பரபரப்பு அடைந்துள்ளன.