ஒவ்வொரு ஆண்டும் இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சாதனை செய்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல் என்ற அறிஞர் ஏற்படுத்திய இந்த பரிசு, அந்த நாட்டை சேர்ந்த நோபல் பரிசு அகாடமி மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டின் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசுக்கு, பிரிட்டிஷ் அமெரிக்க ஆராய்ச்சியாளர் ஜான் ஓ கீஃப், நார்வேயைச் சேர்ந்த தம்பதி எட்வர்ட் மோஸர், மே-பிரிட் மோஸர் ஆகிய மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
நோபல் பரிசுத் தொகையான 11 லட்சம் டாலர்களில் (சுமார் ரூ.6.7 கோடி) ஒரு பாதி ஜான் ஓ கீஃபுக்கும், மற்றொரு பாதி மோஸர் தம்பதிக்கும் பிரித்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பிடத்தை அறிந்துகொண்டு, செல்ல வேண்டிய இடத்துக்கு வழிகாட்டும் “குளோபல் பொஸிஷனிங் சிஸ்டம்’ எனப்படும் இடஞ்சுட்டிக் கருவி, மனித மூளையில் இயற்கையிலேயே அமைந்துள்ளதைக் கண்டறிந்ததற்காக இந்த ஆண்டின் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு இவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இதுகுறித்து நோபல் பரிசு தேர்வாளர்கள் கூறுகையில், “”மூளையின் இடஞ்சுட்டி அமைப்பு குறித்த அறிவைப் பெறுவதில் இந்த மூவரும் அளித்துள்ள பங்களிப்பு, முதுமை நோயால் நினைவாற்றலை இழக்கும் பலருக்கு சிகிச்சை முறைகளை உருவாக்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது” என்றனர்.
ஜான் ஓ கீஃப் (74)
அயர்லாந்திலிருந்து அமெரிக்காவில் குடியேறிய பெற்றோருக்கு நியூயார்க் நகரில் 1939-ஆம் ஆண்டில் பிறந்த ஜான் ஓ கீஃப், கனடாவிலுள்ள “மெக்கில்’ பல்கலைக்கழகத்தில் உளவியல் மருத்துவத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றார். 1967-ஆம் ஆண்டு லண்டன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக இணைந்து, 1987-ஆம் ஆண்டு முதல் அப்பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். பிரிட்டன், அமெரிக்க இரட்டைக் குடியுரிமை பெற்றவர் இவர்.
எட்வர்ட் மோஸர் (52), மே-பிரிட் மோஸர் (51)
தம்பதியான இந்த இருவரும், உளவியல், நரம்பியல் நிபுணர்கள். இவ்விருவரும் நார்வே அறிவியல் தொழில்நுட்பக் கழகத்தின் காவ்லி நரம்பியல் ஆராய்ச்சி மையம், நினைவு உயிரியல் மையம் ஆகியவற்றின் நிறுவன இயக்குநர்கள் ஆவர்.
இதற்கிடையே இந்த ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு 9–ந் தேதி (வியாழக்கிழமை) அறிவிக்கப்படும் என நோபல் பரிசு அகாடமி தெரிவித்துள்ளது