நேற்று முன் தினம் உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டது. புதுடில்லியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி, கலந்து கொண்ட யோகா நிகழ்ச்சி கின்னஸ் சாதனை செய்துள்ள நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு த்ணை குடியரசு தலைவர் ஹமீத் அன்சாரியை மத்திய அரசு அழைக்காதது குறித்து தற்போது கடும் விமர்சனம் எழுந்துள்ளது. இதற்கு மத்திய அரசு தற்போது விளக்கம் அளித்துள்ளது.
புரோட்டோகால் விதிப்படியே துணை குடியரசு தலைவர் அன்சாரி இந்நிகழ்ச்சிக்கு அழைக்கப்படவில்லை என்றும், பிரதமர் தலைமை விருந்தினராக கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் அரசியல் சாசனத்தின்படி உயர் பதவி வகிப்பவரை அழைப்பது சரியாக இருக்காது என்பதால்தான் அவர் அழைக்கப்படவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில் ஹமீத் அன்சாரி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்த பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவராம ராம் மாதேவ், ஹமீத் அன்சாரிக்கு உடல்நிலை சரியில்லாததால்தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று கூறியிருந்தார்.
ஆனால் இது குறித்து விளக்கம் அளித்த துணை ஜனாதிபதி அலுவலகம், ”துணை ஜனாதிபதிக்கு உடல் நலம் சரியில்லை என்பதால் அவர் உலக யோகா தின நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளவில்லை என்பது தவறான தகவல். உலக யோகா தின நிகழ்விற்கு அவர் அழைக்கப்படவில்லை. முறையாக அழைக்கப்பட்டால் மட்டுமே நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டும் என்பது விதிமுறை” என தெரிவித்து இருந்தது.
அன்சாரி யோகா நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாதது குறித்து அவசரப்பட்டு பா.ஜனதா தலைவர் ராம் மாதவ் ட்விட்டரில் கருத்து வெளியிட்டது பற்றி மத்திய அரசு தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.