காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது. மத்திய அரசும் கைவிரிப்பு
காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த முடியாது என கர்நாடக அரசு கூறியுள்ள நிலையில் தற்போது சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த இன்னொரு உத்தரவான காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என மத்திய அரசும் கூறியுள்ளதால் தமிழக அரசு வஞ்சிக்கப்படுவதாக தமிழக தலைவர்கள் கொந்தளித்துள்ளனர்.,
மத்திய அரசின் இந்த முடிவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதி:
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது என்றும், 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு வாரியத்தை அமைக்க உத்தரவிட முடியாது என்றும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்தியில் ஆட்சியில் இருப்போர் விரைவில் கர்நாடக மாநிலத்தில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை மனதிலே கொண்டு, இந்தத் திடீர் முடிவினை, நடுநிலைமை தவறி எடுத்துள்ளனர். கர்நாடகாவின் குரலை எதிரொலிக்கும் ஊது குழலாகவே செயல்பட்டுள்ளனர். இது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்றாகும்.
இந்திய நாட்டின் நீதி பரிபாலன முறைகளையே சிறுமைப்படுத்தும் வகையிலும், மொத்த தமிழ் மக்களை வஞ்சித்திடும் முறையிலும் மத்திய பாஜக செயல்பட்டுள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசின் முடிவையும், கர்நாடக அரசின் முடிவையும் தமிழகத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக இணைந்து எதிர்க்க முன் வர வேண்டும். தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும், சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்க வேண்டும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உத்தரவை உச்சநீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. கர்நாடகத்தில் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், அதில் வாக்குகளை வாங்க வேண்டும் என்பதற்காகவே அம்மாநிலத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டு, தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம் செய்கிறது.
இந்த துரோகத்தை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். மத்திய அரசுக்கு கூட்டாட்சி தத்துவத்தில் நம்பிக்கையும், தமிழக மக்கள் நலனில் அக்கறையும் இருந்தால் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதித்து காவிரி மேலாண்மை வாரியத்தை நாளைக்குள் அமைக்க வேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்:
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என்ற முடிவை முன்னாள் பிரதமர் தேவகெüடாவுடன் பிரதமர் நரேந்திரமோடி பேசியதற்குப் பிறகு மத்திய அரசு எடுத்துள்ளது. இது கண்டனத்துக்குரியது. தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் ஆகும். தமிழக அரசு அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன்:
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசு திடீரென உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருப்பது பேரதிர்ச்சியாக உள்ளது. தமிழர்களுக்கு எதிரான இந்தச் துரோகச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா:
கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு நடுநிலைத் தவறி காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளது.
ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ:
காவிரி மேலாண்மை வாரியம் குறித்து இத்தனை ஆண்டுகள் எதுவுமே தெரிவிக்காத மத்திய அரசு, இப்போது ஒரு புதிய காரணத்தைக் கண்டுபிடித்து இருக்கின்றது. சட்டவிரோதமாகச் செயல்படும் கர்நாடக மாநிலத்திற்கு மத்திய பா.ஜ.க. துணைபோய்க் கொண்டு இருக்கிறது என்பதற்கு தற்போது சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவே ஆதாரம். மோடி அரசின் உள்நோக்கம் வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது.
தமிழ்நாட்டுக்குச் சொட்டுத் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்று கர்நாடகம் மார்தட்டுவதற்கும், காவிரியின் குறுக்கே ராசிமணல், மேகதாதுவில் புதிய அணைகள் கட்டியே தீருவோம் என்று கொக்கரிப்பதற்கும் மோடி அரசின் ஆதரவுப் பின்புலம்தான் காரணம் என்பது அம்பலமாகிவிட்டது.
சுப்ரீம் கோர்ட்டையே மதிக்காத மோடி அரசு இந்திய அரசியல் சட்டத்தைக் கேலிக்கூத்தாக்கிவிட்டது. மத்திய அரசு காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினையில் தமிழ்நாட்டின் நியாயத்தை உணர்ந்து நடந்து கொள்ளும் என்ற நம்பிக்கை தகர்ந்துவிட்டது. மோடி அரசு தமிழ்நாட்டுக்கு இழைத்துள்ள பச்சை துரோகத்தை தமிழக மக்கள் மன்னிக்கமாட்டார்கள்.
தமிழக மக்களும், அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து மத்திய அரசுக்கு எதிராகப் போராடியாக வேண்டும். தமிழக மக்களின் கொந்தளிப்பான மனநிலையைப் புரிந்துகொண்டு மோடி அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற்றுக்கொண்டு, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.