ரயில் பயணம் செய்வதற்காக ஆன்லைனில் டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்யும் போது ஏற்படும் சில பிரச்சனைகளுக்கு தீர்வு செய்யும் வகையில், ரயில் டிக்கெட்டுக்களை வீடு தேடி வந்து நேரில் வந்து கொடுக்கும் புதிய முறை ஒன்றை ரயில்வே துறை அறிமுகப்படுத்தவுள்ளது.
ரயில் டிக்கெட்டுகளை நாம் ஆன்லைனில் முன்பதிவு செய்யும்போது, டிக்கெட்டுக்குரிய பணத்தை நெட் பேங்கிங்’ அல்லது ‘கிரெடிட் கார்டு’ கொண்டு செலுத்துவோம். ஆனால் பலருக்கு நெட்பேங்கிங் வசதி இருப்பதில்லை. ஒருசிலர் கிரெடிட் கார்டு தகவல்களை பதிவு செய்ய தயங்குவார்கள்.
இந்த பிரச்சனைக்கு முடிவு கட்ட ஐ.ஆர்.சி.டி.சி ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்தவுள்ளது. இதன்படி நாம், வழக்கம்போல ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்துவிட்டு, அதன் பிறகு, நாம் பதிவு செய்த டிக்கெட் கன்பர்ம் ஆன பின்னர், அந்த டிக்கெட்டை‘பிரிண்ட்’ எடுத்துக் கொண்டு, ஐ.ஆர்.சி.டி.சி. ஊழியர் நம் வீட்டிற்கு நேரில் வந்து டிக்கெட்டை கொடுத்துவிட்டு பணம் பெற்று செல்வார்.
இந்த வசதியைப் பெற, பயண நாளுக்கு 5 நாட்களுக்கு முன்பே டிக்கெட்டை முன்பதிவு செய்ய வேண்டும். டிக்கெட்டை நேரில் வந்து தருவதற்காக, தூங்கும் வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு டிக்கெட் ஒன்றுக்கு ரூ.40ம், ஏ.சி. வகுப்பு டிக்கெட் ஒன்றுக்கு ரூ.60ம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. முதல்கட்டமாக இந்த வசதி, 200க்கும் மேற்பட்ட நகரங்களில் அமல்படுத்தப்பட்டு உள்ளது.