பாஸ்போர்ட் புதுப்பிக்க போலீஸ் விசாரணை தேவையில்லை. வெளியுறவுத்துறை அறிவிப்பு.

6பாஸ்போர்ட் வழங்கும் முறையை விரைவாகவும், தொல்லையற்றவையாக ஆக்கும் நடவடிக்கைகளை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. அதன்படி இனிமேல் பாஸ்போர்ட் புதுப்பிக்க போலீஸ் விசாரணை தேவையில்லை என்ற நடைமுறை அறிமுகப்படுத்தப்போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

முதன்முதலில் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே  வசிக்கும் முகவரி உட்பட தேவையான தகவல்களை காவல் நிலையத்தை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் விசாரணை செய்வார்கள் என்றும் காலாதியானபின் பாஸ்போர்ட்டை புதுப்பிக்கும் நடைமுறைக்கு போலீஸ் விசாரணை செய்வது ரத்து செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.  இதனால் அநாவசியமான காலதாமதத்தை தவிர்க்கலாம் என மத்திய அரசு கருதுகிறது.

இது தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தையும் இந்தியாவில் உள்ள அனைத்து பாஸ்போர்ட் மண்டல அலுவலகங்களுக்கும் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறுவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் ஆகியோர் தற்போது போலீஸ் விசாரணை இல்லாமலேயே விரைவாக பாஸ்போர்ட் பெற முடியும் என வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் உள்ள தலைமை பாஸ்போர்ட் அதிகாரி முகேஷ் பர்தேஷி தெரிவித்துள்ளார்.

Leave a Reply