திருப்பதி ஏழுமலையான் சன்னதியில் 18 வயது இளைஞருக்கு பேச்சு வந்த அதிசயம்
திருப்பதியை சேர்ந்த ஏழுமலையான் சன்னதியில் 18 வயது ஊமை இளைஞருக்கு பேச்சு வந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.
டெல்லியை சேர்ந்த பிரதிமா என்பவர், அவரது கணவருடன் லண்டனில் வசித்து வருகிறார். இவர்களுக்கு, 18 வயதில் தீபக் என்ற மகன் உள்ளார். ஆனால், தீபக், பிறவியிலேயே ஊமை என்பதால், அவருக்கு பேச்சு கிடைக்க வேண்டி, பிரதிமா தம்பதியினர் பல்வேறு கோவில்களுக்குச் சென்று வழிபாடு நடத்தி வந்தனர்.
இதன் ஒருபகுதியாக, தீபக் 4 வயதாக இருந்தபோது, சிறுவனுக்கு பேச்சு கிடைக்க வேண்டும் என்று, திருப்பதி ஏழுமலையானை பிரதிமா வேண்டிக்கொண்டார்.
இந்நிலையில், தீபக்கின் 15 வயது முதலாக, அவருக்கு பேச்சு வரவேண்டி பலவித பயிற்சிகளை பிரதிமா அளித்து வந்தார். தற்போது அவருக்கு 18 வயதாகும் நிலையில், சில நாட்கள் முன்பாக, திருப்பதிக்கு பிரதிமா குடும்பத்தினர் வந்தனர்.
அங்கு, டிக்கெட் வாங்கிக் கொண்டு, கோயிலுக்குள் சென்று, ஏழுமலையானை தரிசித்தனர். பின்னர் கோயிலில் வழங்கப்படும் பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டனர். அப்போது, கோவிந்தா கோவிந்தா என, பக்தர்கள் கோஷமிட்டு வந்ததைப் பார்த்த தீபக், திடீரென தானும், கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட்டார்.
இதைக் கண்டதும், பிரதிமா மற்றும் அவரது கணவரும் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். இதுபற்றி தகவல் தெரியவந்ததும் தேவஸ்தான அதிகாரிகள் அங்கே விரைந்து வர, தீபக் மழலை மொழியில் பேசத் தொடங்கியிருந்தார்.
இந்த சம்பவம் பற்றி தெரிந்ததும், அங்குள்ள செய்தியாளர்கள் தீபக்கிடம் பேசினர். அவர்களின் கேள்விக்கு, தீபக் மழலை மொழியில் பதில் அளித்தார். பிறவி ஊமைக்கு, திடீரென பேச்சு வந்த சம்பவம் திருமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.