பா.ஜனதா கட்சியை உளவு பார்த்ததாக நேற்று வாஷிங்டன் போஸ்ட் என்ற பத்திரிகையில் வெளியான தகவலை அடுத்து இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு அமெரிக்க தூதருக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனமான என்.எஸ்.ஏ. கடந்த 2010ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியை உளவு பார்த்துள்ளதாக நேற்று ஆதாரபூர்வமான செய்திகள் வெளிவந்துள்ளது.. இதற்கான அதிகாரத்தை அமெரிக்க நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. ஒரு நாட்டின் நீதிமன்றமே இன்னொரு நாட்டின் கட்சியை உளவு பார்க்க அனுமதி வழங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அரசும், பா.ஜனதா கட்சியும் உளவு பார்க்கப்பட்டது பற்றி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு என்.எஸ்.ஏ. செய்தி தொடர்பாளர் வானீ வினீஸ் பதிலளிக்க மறுத்துவிட்டார். இந்நிலையில், பாரதிய ஜனதாவை உளவு பார்த்த விவகாரம் குறித்து இன்று அமெரிக்கா தூதருக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில் அமெரிக்கா உளவு பார்த்த செயலை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், இது கடும் கண்டனத்திற்குரியது என்றும், இது போன்ற செயல் இனியும் நிகழ்ந்தால் இந்திய -அமெரிக்க உறவில் பாதிப்பு ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.